Monday, March 10, 2008

FAREWELL TO CASTRO- The Great Anti-Imperialist

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தை அண்மித்த பிரதேசங்களில் மேற்படி சுவரொட்டிகளை இன்று காணக்கூடியதாக இருந்தது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பிடல் காஸ்ட்ரோ விற்கு விடைகொடுக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடல் காஸ்ட்ரோ 40 ஆண்டுகளுக்கு மேலாக கியூபா வை சுய பொருளாதார அரசாக கட்டிக் காத்திருந்தார். மேற்கு சொல்வது போல கியூபா மக்கள் அரச அடக்குமுறைக்குள் உட்பட்டுவிடவில்லை. மாறாக அனைத்து சுதந்திரங்களையும் அனுபவித்தார்கள். கருத்து சுதந்திரம் என்னும் வகையில் பிடல் காஸ்ட்ரோ இறுதி வரையும் சற்று இறுக்கமாகவே இருந்தார் என்ற போதிலும் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் இதர வசதிகள் தொடர்பாக அவர் ஒரு சொர்க்க பூமியைக் கட்டி எழுப்பி இருந்தார். 40 ஆண்டுகளுக்கு மேலாக அமரிக்க ஏகாதிபத்தியம் செய்த பலவிதமான சதிகளையும் தாண்டி கம்யூனிசம் பற்றிய இறுதி நம்பிக்கையை கம்யூனிஸ்டுகள் மனதில் உலர்ந்து போய் விடாமல் வைத்திருந்தவர் பிடல் காஸ்ட்ரோ மட்டுமே என உறுதியாகச் சொல்லிவிட முடியும். காஸ்ட்ரோ தனது மக்களிடம் இருந்து விடைபெறுவது, எமது கண்களிலும் கண்ணீர் துளிகளை உண்டாக்கிச் செல்கின்றது.

இளம்வயதிலேயே கம்யூனிசக் கொள்கைகளால் ஆகர்சிக்கப்பட்டு போராளியாகி புரட்சியில் ஈடுபட்டு ஒரு நாட்டுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அந்த செயல்வீரனுக்கு நாமும் தலை சாய்க்கின்றோம். கம்யூனிசம் கருத்தியலில் இருந்து பிறப்பதில்லை. மார்க்சின் மேற்கோள்களில் இருந்தும் கம்யூனிச ஆட்சியைத் தோற்றுவித்துவிட முடியாது என்பதை தனது செயல்களினூடாக உணர்த்திய செயல்வீரனே சென்று நீ சென்று வா. முதுமையடைந்த நிலையிலும் நீ உனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்த சேவைகள் எம்மை நெகிழ்சியடைய வைக்கிறது. விடைபெறுகின்ற வீரனே உனக்காக கையசக்கின்றோம்.

*******************************************************************************************************************

மனித உரிமைகள் சங்கம் என்பது கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்துக்கு உட்பட்ட ஒரு சங்கமாகும். இது மனித உரிமைகள் தொடர்பான கல்வி முறைகளில் இருந்து சிறிது வேறுபட்டு நடைமுறை சார்ந்த பிரச்சனைகளினூடாக தனது பாடத்திட்டத்தை வரையறுப்பதில் இருந்து மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை மாணவர்களின் முன் காட்சிப்படுத்தி அதனூடாக மாணவர்களை ஆரோக்கியமான உரையாடலளுக்கு இட்டுச் சென்று அணுகுவதனூடாக மனித உரிமைகளை வெறும் காகிதங்களுக்கு வெளியே கொண்டு சென்ற பெருமை இச்சங்கத்துக்கு உள்ளது. மனித உரிமை தொடர்பான பல திரைப்படங்களை மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி மனித உரிமை தொடர்பான காத்திரமான உரையாடலைச் சாத்தியமாக்கியுள்ளது.

இவ்வகையில் இச்சங்கம் அண்மையில் மேற்படி சுவரொட்டியை பல்கலைக்கழகம் எங்கும் காட்சிப்படுத்தியுள்ளது. இச்சங்கத்திலும் தமிழ் மாணவர்களின் பங்கு மிகவும் குறைவானதே. தமிழ் மாணவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள மாணவர்கள் சமூகம் சார்ந்து இயங்குவது மிக அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் மாணவர்கள் ஏன் இவ்வளவு கேவலமான நிலையை அடைந்தார்கள்? அவர்களது உண்மையான பிரச்சனை என்ன? பாடப்புத்தத்துடன் ஏன் அவர்களது கல்வியுலகம் முடிந்து போகின்றது? சமூகம் பற்றிய பொறுப்புணர்வை அவர்களுக்கு எவ்வாறு ஏற்படுத்திவிட முடியும்? போன்ற கேள்விகள் எம்ம்முன் தவிர்க்க முடியாமல் எழுகின்றன..

'பிடல் காஸ்ட்ரோ' என்பது ஒரு சாப்பாட்டு சாமான் என்ற சொல்லும் மாணவனை எங்காவது பார்த்திருக்கிறிர்களா? இலங்கை முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வந்து தமிழ் மாணவர்களைச் சந்தியுங்கள். இதை விட இன்னும் நல்ல பதில்கள் உங்களுக்கு கிடைக்கும் என மிக நிச்சயமாகக் உறுதியாகக் கூறுகின்றோம். பல்கலைக்க்ழகங்கள் தொடர்பாகவும் அதனோடு இணைந்த சமூக இயக்கங்கள் தொடர்பாகவும் நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

2 உரையாடல்:

Anonymous said...

Good post..
thank you.

Anonymous said...

http://www.be.wvu.edu/div/econ/shiffman.pdf