Thursday, March 13, 2008

தாயகத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு

அக்டோபர் 2007 இல் தமிழர் தகவல் நடுவம் இணையத்தில் வந்த கட்டுரை

-தாயகத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு-

உலகளாவிய ரீதியில் இம்மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் நாள் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படுகின்றனர். இந்தச் சொத்துக்கள் எமது சமூகத்திற்கு சரியாகப்பயன்பட வேண்டும் என்றால் அவர்களது உடல், உள வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

சிறுவர்களின் உளவளர்ச்சிக்கு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, இயல்பான சூழல் என்பன சீராக அமைய வேண்டும். மென்மையான மனப்போக்குக் கொண்ட சிறுவர்களை அவர்களின் உடல், உள ரீதியிலான பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும். உலகின் பல நாடுகளில் இந்த விடயம் பேணப்படுகிறது. சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் எல்லாச் சிறுவர்களும் அவர்களது வயது, பால், நிறம், இனம், மொழி அல்லது சமயம் மற்றும், இயலாத்தன்மை சார்ந்த வேறுபாடுகளின்றி தமது உரிமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். எல்லாவிதப் பாகுபாடு காட்டுதல்களில் இருந்தும் சிறுவர்களை ஒவ்வொரு நாட்டின் அரசும் பாதுகாக்க வேண்டும். சிறுவர்களைப் படையில் சேர்த்துக்கொள்ளுதல் அல்லது ஆயுதப் பயிற்சி வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் சிறுவர்களுக்குத் தரமான கல்வியையும் சமமான வாய்ப்புக்களையும் வன்முறை, துஷ்பிரயோகம் என்பவற்றிலிருந்து அதிக பாதுகாப்பை வழங்குகின்ற உரிமையையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறுவர் உரிமைகள் என்பது இலங்கையில் இல்லையென்றே கூறவேண்டும். மனித உரிமைகளை மீறுகின்ற ஒரு நாடாக சிறீலங்கா, உலக நாடுகளால் மதிப்பிடப்பட்டுள்ளது. சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான சிறுவர்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 83,000 சிறுவர்கள் அவர்களுடைய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன. இது ஒருபுறம் இருக்க, நீண்டகாலப் போர்ச்சூழல்களால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் புதல்வர்களே இன்றைய எமது சிறுவர்கள்.

இது தவிர சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் இந்தச் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைமுறையிலுள்ள துரிதமானதும் சிக்கலானதுமான சமூக பொருளாதார அமைப்பின் அழுத்தம் பல்வேறு வகையான கஷ்டங்களுக்குள் எமது சிறுவர்களை ஆழ்த்தியுள்ளது. இன்று தமிழர் தாயகப்பகுதிகளில் சிறுவர்களின் நலன்கள் சரியாகப் பேணப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் 22 சிறுவர் இல்லங்கள் இயங்கிவருகின்றன. இந்தச் சிறுவர் இல்லங்களில் 2611 சிறுவர்கள் இணைந்து தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்தச் சிறுவர் இல்லங்களில் இணைந்துகொள்வதற்கான பின்னணியை நோக்கினால்,

* தொடரும் போர்ச்சூழலில் ஏற்படும் சமூக சீரழிவினால் நலிவுற்று வறுமையில் வாழும் குடும்பப் பின்னணி.

* தொடரும் இடப்பெயர்வு காரணமாக குடும்பப் பொருளாதாரம் உறுதியற்ற நிலை.

* தாய் அல்லது தந்தையை இழந்த நிலை யில் குடும்பத்தில் உழைப்பாளர்கள் அல்லது குடும்பப் பின்னணிக்கான நபர் அற்ற நிலை.

* தாய் அல்லது தந்தை போரினால் பாதிக்கப்பட்டு உடல் அல்லது உளரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள்.

இப்படியான சிறுவர்களே இந்தச் சிறுவர் இல்லங்களில் இணைந்துள்ளனர். நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தூரநோக்கோடு தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் சிறுவர்கள் பற்றிய விடயங்கள் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற சிறுவர் இல்லங்கள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதனைவிட சமூகத்தில் சிறுவர்களின் நலன்கள் சரியாகப் பேணப்பட வேண்டும் என்பதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குடும்பவறுமை, பொருளாதாரப் பின்னடைவு, நேரடியான போர்ப்பாதிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும் 18 அகவைக்கு உட்பட்ட சிறுவர்கள் மீளப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பெற்றோரிடம் இணைய மறுக்கின்ற சிறுவர்கள் தொழிற்கல்விக்காக தொழிற்பயிற்சி நிலையங்களில் இணைக்கப்பட்டு தொழில்சார் பயிற்சிநெறிகள் வழங்கப்படுகின்றன. தமிழீழத்திலுள்ள சிறுவர்களின் உரிமைகளைப் பேணுவதற்கும் காப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் பேணப்படும் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு தமிழீழத் தேசிய தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தமிழீழ சட்டவாக்க செயலகத்தினால் தமிழீழ சிறுவர் காப்புச் சட்டம் நடைறைக்கு வந்துள்ளது.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் நாள் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில்,

* 18 அகவைக்குட்பட்ட சிறுவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ படைகளில் சேர்த்துக்கொள்ளல் அல்லது போரில் ஈடுபடுத்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

* கல்விசார் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு உரிமைகள், சிறுவர்சார் உசாவல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

* பெற்றோர்களுடன் இருக்கும் சிறுவர்கள் கொண்டிருக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படல், குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை இனங்கண்டு அவர்களைச் சீர்திருத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் தெளிவாகக் கூறுகின்றது.

சிறுவர்கள் தொடர்பான பிணக்குளை விசாரிப்பதற்கு சிறுவர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களின் தேவைகளை சிறுவர் மேம்பாட்டு அவை மேற்கொண்டு வருகின்றது. இந்தச் சிறுவர் மேம்பாட்டு அவை சிறுவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்படுகின்றது.

சிறீலங்காப் படைகள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரும் சிறுவர்களின் நலன்கள் இங்கு சரியாகப் பேணப்பட்டு வருகின்றது. இதற்காக சிறுவர் பூங்கா, போசாக்கு நிலையங்கள், சிறுவர் இல்லங்கள் பிரதேச ரீதியாகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

February-2008 படையணிகளில் சிறார்களை சேர்ப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஆண்டு அறிக்கையில் இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

-Child Soldiers section of the State Department s Country Report on Human Rights for Sri Lanka-

Both the LTTE and the Karuna group (also known as TMVP, or Pillaiyan group) used minors in battle. The Karuna group and the LTTE also continued to recruit child soldiers forcibly, while intimidating and using violence against civilians.

The LTTE instituted a `one family, one fighter` policy, forcing each family to provide at least one member, including children, to the LTTE. By year`s end most sources indicated that the `one family, one fighter` policy targeted those 18 years or older. The UN Children`s Fund (UNICEF) noted a significant reduction in reported child recruitment by the LTTE. While the trend indicated that the LTTE was eliminating the recruitment and use of child soldiers, it had not complied with the promise to end the use of all minors by year`s end. UNICEF reported that the LTTE forcibly recruited (or rerecruited) 160 children during the year with an average age of 16 years. At year`s end 205 children remained in LTTE custody, including 1,224 who were recruited as children but were over 18 at year`s end.

According to UN sources, there was limited progress during the year in the release of children recruited by both groups. A UNICEF supported action plan sought to rehabilitate former LTTE child soldiers through release and reintegration. Under this program there were to be three UNICEF-supported transit centers. Two of the transit centers, in Batticaloa and Trincomalee, never opened because of a lack of releases by the LTTE. By mid-year the LTTE no longer controlled these areas. UNICEF supported the establishment of a transit center in Kilinochchi for child recruits released by the LTTE, which remained open, but UNICEF noted that its use was limited and declining.

The Karuna group continued to recruit children, some forcibly after abduction. Karuna cadres used coercion, extortion, rape, and murder to force children and adults to join their ranks. Karuna operatives often bribed parents to allow their children to join the Karuna group, and punished parents or children if they resisted.

Unlike the LTTE, UNICEF statistics indicated that child recruitment by the pro-government Karuna group did not decline. The UN Special Rapporteur (UNSR) on Children and Armed Conflict reported and cited evidence that government forces were at times complicit in the recruitment of children. During the year, UNICEF reported that the Karuna group recruited and rerecruited children for use as child soldiers, especially in Batticaloa district for a total of 251. This was more than in 2006, although the rate of recruitment was down from its peak in late 2005. Some previously recruited child soldiers reached 18 years of age while continuing to serve in the Karuna group. UNICEF figures show that at the end of the year, 160 children were still serving in the Karuna forces, and 69 who were recruited as children were now over age 18.

Tuesday, March 11, 2008

அம்மாவையும் அப்பாவையும் இனி காண மாட்டம் எண்டு நினைக்க் நெஞ்சுக்கை ஏதோ செஞ்சுது..

"எங்கட வீட்டில நானும், அம்மாவும், அப்பாவும், தம்பியும், தங்கச்சியும் ரெண்டு பாயை விரிச்சுப் போட்டு பெட்சீட் எல்லாம் விரிச்சுப் போட்டு ஒண்டாய் தான் படுப்பம். விடிய கோப்பித்தண்ணி ஊத்திப் போட்டு அம்மா எங்கள எழுப்புவா. அப்ப, அப்பா கிணத்தடியில நிப்பார். பிறகு அம்மா எங்கள வெளிக்கிடுத்தி பள்ளிக்கூடம் அனுப்புவா. அப்பாண்ட சைக்கிள்ளை நாங்கள் மூண்டு பேரும் பள்ளிக்கூடம் போவம். அதுக்கு பிறகு அப்பா சந்தைக்கு யாவாரத்துக்கு போடுவார். பின்னேரம் அப்பா தான் கூட்டிக் கொண்டு வருவார் பள்ளிக்கூடத்தில இருந்து எங்களை.

ஒரு நாள் நாங்கள் பள்ளிக்கூடத்தில இருக்கேக்கை கிபிர் வந்து அடிச்சான். முதல்ல எங்கயோ அடிக்கிறான் எண்டு தான் நினச்சம். ஆனா பள்ளிக்கூடத்துக்கை ஒரு குண்டு வந்து விழுந்துச்சு. என்னக்கு மேல ஆற்றையோ கால் ஒண்டு வந்து விழுந்துச்சு. நான் அப்பிடியே வேலிக்கை போய் விழுந்தன். பிரண்ட்ஸ் பிள்ளையள் மூண்டு பேர் செத்துப் போச்சினம். ஆரோ சொல்லிச்சினம் எங்கட வீட்டுக்கையும் குண்டு விழுந்ததாம் எண்டு. தம்பியையும் தங்கச்சியையும் கூட்டிக் கொண்டு ஓடிப் போனன் வீட்டுக்கு. வீட்டைச் சுத்தி ஒரே சனம். என்னைக் கூப்பிட அம்மா வரேல்லை. அம்மாவையும் அப்பாவையும் இனி காண மாட்டம் எண்டு நினைக்க் நெஞ்சுக்கை ஏதோ செஞ்சுது..

இரவில அம்மாக்கு பக்கத்தில ஆர் படுக்கிறது எண்டு சண்டை பிடிக்கிற தம்பியும் தங்கச்சியும் பிரமை பிடிச்சு நிண்டுதுகள். கொள்ளி வைக்கும் மட்டும் என்ட கண்ணுக்கை நாங்கள் எல்லாம் ஒண்டாய் படுக்கிறது தான் கண்ணுக்கை நிண்டுது. இனி நாங்கள் ஆரோடை படுக்கிறது எண்டு நினைக்க நினைக்க எனக்கு மயக்கம் வாற மாதிரி இருந்துச்சு......................."

It is a Kfir- Short film

Monday, March 10, 2008

FAREWELL TO CASTRO- The Great Anti-Imperialist

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தை அண்மித்த பிரதேசங்களில் மேற்படி சுவரொட்டிகளை இன்று காணக்கூடியதாக இருந்தது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பிடல் காஸ்ட்ரோ விற்கு விடைகொடுக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடல் காஸ்ட்ரோ 40 ஆண்டுகளுக்கு மேலாக கியூபா வை சுய பொருளாதார அரசாக கட்டிக் காத்திருந்தார். மேற்கு சொல்வது போல கியூபா மக்கள் அரச அடக்குமுறைக்குள் உட்பட்டுவிடவில்லை. மாறாக அனைத்து சுதந்திரங்களையும் அனுபவித்தார்கள். கருத்து சுதந்திரம் என்னும் வகையில் பிடல் காஸ்ட்ரோ இறுதி வரையும் சற்று இறுக்கமாகவே இருந்தார் என்ற போதிலும் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் இதர வசதிகள் தொடர்பாக அவர் ஒரு சொர்க்க பூமியைக் கட்டி எழுப்பி இருந்தார். 40 ஆண்டுகளுக்கு மேலாக அமரிக்க ஏகாதிபத்தியம் செய்த பலவிதமான சதிகளையும் தாண்டி கம்யூனிசம் பற்றிய இறுதி நம்பிக்கையை கம்யூனிஸ்டுகள் மனதில் உலர்ந்து போய் விடாமல் வைத்திருந்தவர் பிடல் காஸ்ட்ரோ மட்டுமே என உறுதியாகச் சொல்லிவிட முடியும். காஸ்ட்ரோ தனது மக்களிடம் இருந்து விடைபெறுவது, எமது கண்களிலும் கண்ணீர் துளிகளை உண்டாக்கிச் செல்கின்றது.

இளம்வயதிலேயே கம்யூனிசக் கொள்கைகளால் ஆகர்சிக்கப்பட்டு போராளியாகி புரட்சியில் ஈடுபட்டு ஒரு நாட்டுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அந்த செயல்வீரனுக்கு நாமும் தலை சாய்க்கின்றோம். கம்யூனிசம் கருத்தியலில் இருந்து பிறப்பதில்லை. மார்க்சின் மேற்கோள்களில் இருந்தும் கம்யூனிச ஆட்சியைத் தோற்றுவித்துவிட முடியாது என்பதை தனது செயல்களினூடாக உணர்த்திய செயல்வீரனே சென்று நீ சென்று வா. முதுமையடைந்த நிலையிலும் நீ உனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்த சேவைகள் எம்மை நெகிழ்சியடைய வைக்கிறது. விடைபெறுகின்ற வீரனே உனக்காக கையசக்கின்றோம்.

*******************************************************************************************************************

மனித உரிமைகள் சங்கம் என்பது கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்துக்கு உட்பட்ட ஒரு சங்கமாகும். இது மனித உரிமைகள் தொடர்பான கல்வி முறைகளில் இருந்து சிறிது வேறுபட்டு நடைமுறை சார்ந்த பிரச்சனைகளினூடாக தனது பாடத்திட்டத்தை வரையறுப்பதில் இருந்து மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை மாணவர்களின் முன் காட்சிப்படுத்தி அதனூடாக மாணவர்களை ஆரோக்கியமான உரையாடலளுக்கு இட்டுச் சென்று அணுகுவதனூடாக மனித உரிமைகளை வெறும் காகிதங்களுக்கு வெளியே கொண்டு சென்ற பெருமை இச்சங்கத்துக்கு உள்ளது. மனித உரிமை தொடர்பான பல திரைப்படங்களை மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி மனித உரிமை தொடர்பான காத்திரமான உரையாடலைச் சாத்தியமாக்கியுள்ளது.

இவ்வகையில் இச்சங்கம் அண்மையில் மேற்படி சுவரொட்டியை பல்கலைக்கழகம் எங்கும் காட்சிப்படுத்தியுள்ளது. இச்சங்கத்திலும் தமிழ் மாணவர்களின் பங்கு மிகவும் குறைவானதே. தமிழ் மாணவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள மாணவர்கள் சமூகம் சார்ந்து இயங்குவது மிக அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் மாணவர்கள் ஏன் இவ்வளவு கேவலமான நிலையை அடைந்தார்கள்? அவர்களது உண்மையான பிரச்சனை என்ன? பாடப்புத்தத்துடன் ஏன் அவர்களது கல்வியுலகம் முடிந்து போகின்றது? சமூகம் பற்றிய பொறுப்புணர்வை அவர்களுக்கு எவ்வாறு ஏற்படுத்திவிட முடியும்? போன்ற கேள்விகள் எம்ம்முன் தவிர்க்க முடியாமல் எழுகின்றன..

'பிடல் காஸ்ட்ரோ' என்பது ஒரு சாப்பாட்டு சாமான் என்ற சொல்லும் மாணவனை எங்காவது பார்த்திருக்கிறிர்களா? இலங்கை முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வந்து தமிழ் மாணவர்களைச் சந்தியுங்கள். இதை விட இன்னும் நல்ல பதில்கள் உங்களுக்கு கிடைக்கும் என மிக நிச்சயமாகக் உறுதியாகக் கூறுகின்றோம். பல்கலைக்க்ழகங்கள் தொடர்பாகவும் அதனோடு இணைந்த சமூக இயக்கங்கள் தொடர்பாகவும் நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

Saturday, March 8, 2008

கலை என்பது விபச்சாரம் செய்வதல்ல- இரயாகரன்.

கொழும்பு பலகலைக்கழக விஞ்ஞான பீடம் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்(!?) சம்பந்தமாக தமிழரங்கம இணையத்தளத்தின் ஆசிரியரான இராயகரன் எமக்குப் பின்னூட்டம் இட்டிருந்தார். ரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். பல்கலைக்கழகம் சார்ந்த பல நடவடிக்கைகளில் தீவிரமாக பங்குபற்றியவர்.தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT) என்ற இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். 1986 ஆம் ஆண்டு காணாமல் போன மாணவன் விஜிதரன் விடயத்த்தில் அதை எதிர்த்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என அறிகின்றோம். அவ்வகையில் பல்கலைக்கழகத்தில் இருந்தவாறு சமூக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு மாணவன் கொழும்பு பல்கலைக்கழகம் விஞ்ஞானபீடம் பற்றி தெரிவிப்பதை கீழே பார்க்கலாம்.

அதற்கு முன் சில விடயங்களைக் கூற வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு மொரட்டுவ பலகலைக்கழக மாணவர் ஒருவர் கடத்தப்பட்டதாக அறிகின்றோம். ஆயினும் மாணவர்கள் எவரும் அது தொடர்பிலான தமது எதிர்வினைகளை ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மாணவர்களால், பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்பது உண்மைதான். ஆயினும் பல்கலைக்கழகம் என்ற அளவில் தமக்குள் ஒன்றுபட்டாமலும் குறைந்தபட்சம் தமது நண்பர்களுக்காக எதுவும் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டுடன் இருப்பது கவலைக்குரியது. அதற்கும் மேலால் கொழும்பு பலகலைக்கழகத்தில் இனத்தின் துயரத்தை மறந்து படம் எடுப்பதில் தமது செயற்பாடுகளை வீணாக்குகின்றனர். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் தவிர மற்றைய அனைத்து பீடங்களும் கொஞ்சமாவது சமூக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர் என்பது அவர்களது செயற்பாடுகளில் இருந்து விளங்கக்கூடியதாக இருக்கின்றது. முகாமைத்துவ பீடம் மற்றும் சட்ட பீடம் போன்றவை அரங்கேற்றிய நாடகங்கள் சமூகத்தின் துயரம் பற்றியதே.

விஞ்ஞான பீட மாணவர்கள் பலர் எமக்கு மின்னஞ்சல் இட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக தமது பீடத்தை நாம் விமர்சித்ததை அவர்கள் ஏற்றுக்கொளவில்லை. ஒரு சில மாணவர்களின் தனிப்பட்ட நடத்தையின் காரணமாக அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கின்றோம். ஒரு மாணவர், தனிப்பட்ட ரீதியில் இதில் பங்கு கொண்டவர்கள் மற்றும் இதில் பலாத்தகாரமாக பணம் சேர்க்கப்பட்டது தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டு வந்தார். பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மாதாந்த புலமைப்பரிசிலான 'மகாபொல' நிதி பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கறைப்படாத அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது பீடத்தின் நற்பெயருக்கு களங்கள் ஏற்பட்டுவிட்டது என கூறுவது எமக்கு அதிசயமாக உள்ளது.

ஒரு சில மாணவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவது என்பது எவ்வகையில் சரியானது எனக்கேட்கின்றோம். திரைப்படத்தை தயாரித்த மாணவர்களது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த பிரிவில் உள்ள மாணவர்கள் பலர் அவர்களுடன் இணைந்து நடப்பதில்லை எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறானா அராஜகங்கள் மூலம் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முற்படும் ஒரு குழுவிற்கு ஆதரவாக பலர் எழுதுவதும் குரல் கொடுப்பதும் ஆரோக்கியமான சூழல் அல்ல.

மற்றும் மு. மயூரன் கூறியுள்ளது போல வீரகேசரி பேட்டியாளர் அவர்களை சில இடங்களில் நக்கல் அடித்ததை கூட உய்த்துணர முடியாதவர்கள பல்கலைக்கழகம் உற்பத்தி செய்துகொண்டிருப்பதென்பதன் ஆபத்தை சுட்டிக்காட்டவும் வேண்டும். ஒரு வேளை உணவுக்கு கூட வழியற்ற மக்கள் தாம் வாங்கும் பாணில் இருந்து தீப்பெட்டிவரை கட்டிக் கொண்டிருக்கும் வரிப்பணத்தில் இலவசமாக கல்வி கற்பவர்கள், கல்வி கற்பதற்காக அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில் நிதியை கட்டாயத்தின் பேரில் வசூலித்து அதனை பயன்படுத்தி இவ்வாறான மோசமான திரைப்படங்களை தயாரிப்பதன் உள்நோக்கம் தான் என்ன?

அத்துடன் மாணவர்கள் சார்பாக வெளியிடப்பட்ட கருத்து ஒன்றில் எக்ஸ் குரூப்பில் இது வெளியாவது தமக்கு அக்கறை இல்லை என்று சொல்கின்றார். விரைவில் எமது குழு இதன் தொகுப்பை தேசியப் பத்திரிகை ஒன்றிலும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிலும் வெளியிடுவதாக உத்தேசித்துள்ளது. அப்போது தமது தறுக்காக வருத்தப்படக்கூடும். மாணவர்களின் சமூக அக்கறை குறித்தான ஆய்வுக்காக வாசகர்கள் இது தொடர்பில் அக்கறை எடுத்து உங்களது உரையாடலைப் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்.

திரைப்படத்தின் Trailor இங்கே சென்று பார்க்கலாம்.
X-GROUP

இனி தோழர் ரயாகனது பின்னூடத்தைப் பார்ப்போம்.

கலை என்பது விபச்சாரம் செய்வதல்ல- இரயாகரன்.
விபச்சாரத்தை கலை என்பது எப்படி? போலித்தனங்களை, போலித்தனமான வாழ்வை, போலியாக நடித்து கடுட்வது விபச்சாரம் தான். எதிலும் உண்மை கிடையாது. உண்மையாக வாழ்தல் என்பது, அழகுணர்ச்சியற்றதாக எண்ணுகின்ற மனநிலையைத்தான், இந்த படம் கற்பிக்கின்றது.

போலித்தனத்தை உண்மையானதாகவும், அழகானதாகவும் காண்கின்ற, காட்டுகின்ற வாழ்க்கையை, வக்கிரமாக்கி அதைப் படமாக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறிக்கொண்டு, சமூகத்தின் உதவியல் இலவசமாக கற்றுக்கொண்டு, சமூகத்திடமே உதவியைக் கோரிக்கொண்டு, சமூகத்துக்கே ஆப்பு வைக்கின்றனர். தம்மைப் போல் சமூகத்தையும் தம்முடன் சேர்ந்து விபச்சாரம் செய்ய படம் காட்டுவது கலையல்ல.

இந்தியா சினிமா என்பது, மனிதர்களின் வாழ்வை பிரதிபலிப்பவையல்ல. அது பாலியல் ஆபாசத்தை, தனிமனித வன்முறைத் துண்டிய படி, உலகமயமதால் லும்பன் பண்டபாட்டை சமூத்தில் நஞ்சாகவே இடுகின்றது. இந்தச் சினிமா கலையில் ஆன்மா என்பது, கவாச்சியும் ஆபாசமும் தான்.

இதற்கு வெளியல் இந்த பல்கலைக்கழக மாணவர்களின் சிந்தனை மட்டம் வளரவில்லை என்பதை, அவர்களாக சொல்வதுதான் இந்தப் படம். இவர்கள் சமூகத்துக்கு எதையும் வழிகாட்ட முடியாத தற்குறிகள். அடிப்படையில் சமூக அறிவற்றவர்கள். சமூகத்துக்கு வெளியில் கற்பனையில், போலியாக காட்டி வாழ முனைபவர்கள்.

இந்தியா சினிமா கும்பபையைப் பின் பற்றி நிற்பது, சுய அறிவற்ற அடிமுட்டாள் தனம். சமூகத்தில் வடிகட்டப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களில் கற்பவர்கள், அவித்துப் போட்டு நிற்கும் காட்சி தான் படமாக வெளிவருகின்றது. உண்மையில் இவர்கள் சொந்த மனவக்கிரம், வக்கிரமாகி வெளிப்படுகின்றது. இதையே அனைவருக்கும் என்கின்றது.

இவர்கள் ராக்கிங் செய்கின்ற போது எதை செய்கின்றனர் என்றால், இதைத் தான். அனைத்தையும் பெண்ணின் பாலியல் அங்கத்தின் ஊடாகத் தான், பெண்ணை கவர்ச்சியாக ஆபாசமாகக் காட்டித் தான், சொந்த தனிமனித வன்முறை ஊடாகத்தான், அனைத்ததை சொந்த சுயநலத்துடன் தான், நடைமுறையில் கையாளுகினர் அனுகுகின்றனர். இதைதான் மறுபடி படம் சொல்கின்றது.

இவர்கள் பல்கலைகழகத்தில் நடத்தும் ராக்கிங்கை, அதன் மனவிகரங்களைப் பற்றி படம் எடுக்கவே மடியாது. இவர்களின் சிந்தனை வட்டம் என்பதும், வாழ்வியல் முறை என்பதும், ஆபாசமும் வன்முறை கொண்ட தனிநபர் நலன் சார்ந்தது தான். இந்த குறுகிய தமது சொந்த சூத்தையை, அற்பத்தனத்துடன் படமெடுத்து காட்ட முனைகின்றனர்.

எதிர்கால அதிகார வர்க்கங்களின், சமூகத்தின் வழிகாட்டிகளின் சொந்த வக்காரம் என்பது, இப்படி மலிவான இழிவான நாடகத்தனங்கள் தான்.

இந்த மாதிரி வாழ்வதாக காட்ட முனையும் இவர்களின், சொந்த போலித்தனங்கள் தான் இவை. தமது சொந்தக் குடும்பம் இவர்களைக் படிப்பிக்கப்படும் கஸ்ரத்தை பேசுவதில்லை. அவர்களை சுற்றி நிகழ்கின்ற வாழ்வியiவை, அந்த சமூக நெருக்கடிகளைப் பற்றி பேசுவதில்லை. இதற்கு வெளியில் வாழ்வதாக பாசங்கு செய்வதே, இவர்களின் போலித்தனமாகி விடுகின்றது.

எதிர் காலத்தில் சாதி பார்த்து திருமணம், கொழுத்த சீதனம் வாங்கிய திருமணம், எப்படி பணக் கட்டுகளை சம்பதிக்கலாம் என்ற எல்லக்குள் தான், இவர்களின் சிந்தனை எல்லையே சுருங்கிக் கிடக்கின்றது.

இவர்கள் கட்டும் படம்; எது? கறுப்புக் கண்ணடி, தலை முடியையும் தாடியையும் விதவிதமாக அழகுட்டுவது, இயல்பற்ற நாலு துல்லல், போலியான தீமிரான வாய் வீரம், பல்லைக்கட்டும் போலித்தனம் பாலியல் கவாச்சியை அழகுட்டிய பெண்ணும், நீலிக் கண்ணிர் வடிக்கும் சோகம், போலியான மனிதபிமான காட்சிகள், என்று அனைத்தையும் போலியாக உருவமைத்து காட்டுவது தான் படமாகின்றது. இந்த போலியான சமூக உணர்வு, அது சார்ந்த சிந்தனை உணர்வு என்ற எல்யைத்தாண்டி, எதுவும் இதில் கிடையாது. எல்லாம் போலி.

Wednesday, March 5, 2008

கொழும்பு பல்கலைக்கழகம்- கேவலத்தின் சாட்சி.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்றை தயாரித்துத் திரையிட்டிருந்தார்கள். அது தொடர்பாக சில குறிப்புகளை வரையலாம் என்ற எண்ணம் இருந்த போதிலும் பொதுத்தளத்தில் கேவலமான விடயங்களை காட்சிப்படுத்துவதின் காரண்மாக அவை இன்னுமின்னும் வேகமான பரவலுக்குள்ளாகி தீய அதிர்வுகளை உண்டாக்க கூடும் என்ற பயத்தின் காரணமாக இது பற்றிப் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம். ஆயினும் ஒரு சில வாரங்களில் அது தொடர்பான விடயம் ஒன்றை வீரகேசரியில் கண்ட போதும் எதிர்வினையாற்ற எண்ண்யிருந்தோம். ஆயினும் அதனையும் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. இன்று இணையத்தில் இத்திரைப்படத்தை முன்வைத்து ஊரோடி பகீ பிச்சை எடுக்க முற்படுகின்ற இவ்வேளையில் இது தொடர்பாக எதிர்வினையாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்க்குத் தள்ளப்படவேண்டியதாயிற்று.

கொழும்பு பல்கலைக்கழகம் நூற்றாண்டுகால சிறப்பை தன்னகத்தே கொண்டது. நூற்றுக்கணக்கான சமூக ஆய்வாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கிய பெருமை பெற்றது. சமூகத்தளத்தில் கொழும்பு பலகலைக்கழகத்தின் மிகப்பெரியது. பல்வேறுவகையான சமூக ஆர்வலர்களை உற்பத்திக்களமாகவும் விளங்கியது.

இலங்கையில் மார்க்சிய இயக்கங்களில் ஆரம்பித்து போராட்ட இயக்கங்கள் வரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் காலத்தின் சாட்சியாக இருந்தார்கள். ஈழத்தின் புதுக்கவிதை முன்னோடி முருகையன் இது பற்றி அழகாகச் சொல்லுவார். தாங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த காலங்களில் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாட்டு இயக்கங்கள் பற்றிய விடயங்களை. அப்போது கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் இருந்தது. அதன் பின்னர் ஜே.வி.பி புரட்சி மையம் கொண்ட 70 களில் கொழும்பு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து பல விதமான புரட்சிகர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கணிசமான அளவினர் தமிழ் மாணவர்களே. ஆரம்பத்தில் கருத்தியல் அளவில் உள்வாங்கப்பட்ட மார்க்சியம் பின்னர் பல்கலைக்கழகங்களை முன்வைத்து புரட்சிகர செயற்பாட்டு இயக்கங்களாக வளர்ச்சி பெற்றது. அவ்வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. அதிலும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம் இது தொடர்பாக பரந்த அளவில் தன்னை ஈடுபடுத்தியதும் அதில் தமிழர்கள் கணிசமான அளவானோர் என்பதும் வரலாறு.

தமிழ்த்தேசியம் எழுச்சி பெற்ற காலங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவை தொடர்பான கலந்துரையாடல்கள் பல்வேறுவகைப்பட்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன. தெற்கில் இருந்த மாணவர்கள் வடக்கில் இருந்த மாணவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி அவை தொடர்பாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் தம்மை போராளிகளாக இணைத்துக் கொண்டு போராட்டத்தில் நேரடியாகவே பங்குபற்றினர்.

புளொட் இயக்கத்தின் உள்விவகாரங்களை வெளிக்கொணர்ந்த ஈழத்தின் முக்கியமான அரசியல் படைப்பான புதியதோர் உலகம் என்பதை எழுதியவர் பிற்காலத்தில் கோவிந்தன் என அறியப்பட்ட நோபேட் கொழும்பு பல்கலைக்கழக மாணவனே. புதியதோர் உலகம் முன்னுரையில் இருந்து சில விடயங்கள்.. ...இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார்...

தமிழ்த்தேசிய எழுச்சியின் பிற்பட்ட காலங்களிலும் கோவிந்தன் போன்று புலிகள் அமைப்பிலும் பல கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வேலை செய்தனர். இயக்க அரசியலில் ஈடுபட விருப்பமற்ற மாணவர்கள் அது தவிர்த்து சமூக அபிவிருத்தி இயக்கங்க்ளில் ஈடுபட்டனர். ஆயினும் 90 களின் பிற்பகுதி தெற்கில் வாழும் மாணவர்களை இன அடையாளம் சார்ந்து செயற்பட முடியாத நிலமைக்கு உள்ளாக்கியது. சமூகம் சார்ந்து செயற்பட முடியாத நிலைக்கும் இன ஒடுக்குதலுக்கு உள்ளாகிய மாணவர்கள் தம்மால் இயன்றவரை தமது அடையாளம் சார்ந்த பிரக்ஞையின் காரணாமாக அடையாள பேணுகையை மேற்கொண்டனர்.

தமிழ்விழா போன்ற பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் ஊடாக தமது குறைந்தபட்சமான குரலை ஒலிக்கச்செய்தனர். மொரட்டுவ பல்கலைக்க்ழகம், பேராதனிய பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்ழகம் மற்றும் சப்பிரகமுவ பல்கலைக்கழகம் போன்றவை இவற்றில் முக்கியமானவை. முக்கியமாக நாடகங்கள் மூலமாக தமது ஈனக்குரலை வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்றனர். சில வருடங்களுக்கு முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகம் தமது வருடாந்த கலைநிகழ்ச்சியூடாக டக்ளஸ் தேவானந்த அவர்களை கடுமையாக வசைபாடியது. கேலியான நடிப்பினூடாக மாணவரொருவர் அருமையாக அதனை வெளிப்படுத்தியிருந்தார். கொழும்பைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து இயங்குவதன் கடினத்தை நாம் அறிவோம். ஆயினும் எங்கிருந்தாவாது வரும் ஒரு சில குரல்களுக்காவது எமது ஆதரவை எழுத்து மூலமாகவாவது தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

கொழும்பு பல்கலைக்கழகமும் தமது வருடாந்த நிகழ்ச்சிகளை இவ்வாறான முறையில் தொடர்ச்சியாக செய்து வந்தது. வடக்கு கிழக்கில் நடைபெறும் யுத்தத்தினால் ஏற்படும் துயரங்களை வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தம்மால் இயன்ற அளவில் பதிவுசெய்தனர். மற்றும் வர்த்தக நோக்கில் பொதுப்புத்தியை அவமதிக்கும் நோக்கில் தயாரிக்கப்டும் சினிமா மற்றும் நாடகம் போன்ற்வற்றிற்கு மத்தியிலும் மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை வலுப்படுத்தும் நோக்கிலான படப்புக்கள் இன்றும் அழிந்து போகாமல் இருக்கின்றன என்பதற்குச் சாட்சியாக பல்கலைக்கழகங்களில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இறுதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூத்து பற்றியதான நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த வேளை கலை தொடர்பாக மாணவர்களிடத்தில் எஞ்சியிருக்கும் நினைவுகள் நம்பிக்கையளிக்க கூடியவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அயினும் அதன் பின்னர் ஒரு குழுவினர் தென்னிந்திய சினிமாப் பாணியில் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினர். பாலியலை மையாமாக்கிய ஆணாதிக்க சொல்லாடல்களினூடான பகிடிகள் மூலம் பகிரங்கமான மேடையில் மாணவ சமூகத்தால் அரங்கேற்றப்பட்டது. அவர்கள் தமது அசைவுகளையும் சொற்களையும் வர்த்தக சினிமாவில் இருந்து பெற்றுக்கொண்டனர். பார்வையாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்த வகையிலானதாக அவர்களின் வெளிப்படுதிறன் அமைந்திருந்தது. இம்மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் என அறியக்கிடைத்தது.

அதன் பின், நடந்த இன்னுமொரு விழாவில் திரைப்படம் ஒன்று மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. முந்தய விழாவைக் கேவலப்படுத்திய அதே குழுவினராலேயே இம்முறை இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டதாக அறிந்தோம். அக்குழுவினர் வழமையாக இதேவிதமான நாடகங்களை மேடையேற்றுவதாகவும் அதன் உச்சக்கட்டம் தான் இத்திரைப்படம் எனவும் அறியக்கிடைத்தது. இங்கு மாணவரின் கேளிக்கை உணர்வினை விமர்சிப்பது எமது நோக்கமல்ல. ஆயினும் வர்த்தக நோக்கிலான கலைவடிவங்களே மக்கள் சார்பானவை மக்களுக்கானவை சமூக மயமானவை சமூக யதார்த்ததளத்தில் அமையப்பெற்றவை எனும் மாயை கட்டமைக்கப்படுவதையும் அதன் தொடர்ச்சியான போக்கிலான அபாயத்தினையும் சுட்டிக்காட்டுவதே எமது நோக்கமாகின்றது.

தென்னிந்திய சினிமா வின் நேரடியான தாக்கத்துக்கு உட்பட்ட கேவலமான சமூகக்குழு ஒன்றிடம் இருந்து இதற்கு மேல் எதிர்பார்ப்பது தவறென்பது விளங்கியதாலேயே இவ்விடயம் பற்றி நாம் அதிகம் அக்கறை எடுக்கவில்லை. இக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 ஆம் வருட மாணவர்களாவார்கள். இதற்கு முந்தைய பிரிவினர் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடியவர்கள் அல்ல என சிரேஸ்ட மாணவர்கள் தரப்பில் தெரிவீக்கப்பட்டது. ஆயினும் இம்மாணவ குழுவுக்கு கீழே புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர்களையும் இவ்வாறான மனநிலை தயாரிப்புக்கு இம்மாணவ குழு உட்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இப்பிரிவைச் சேர்ந்த பல மாணவர்களின் விருப்பமின்றி ஒரு சிலரே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த பிரிவு மாணவர்களில் ஒரு பகுதியினரது ஒத்துழைப்புடன் கூட்டாகவே எடுக்கப்பட்டதாக அறிகின்றோம்.

தமிழ்மணம் வாசகர்களே,
நீங்கள் இப்படத்துண்டைப் பார்த்திருப்பீர்கள். இதிலிருந்து இத்திரைப்படம் பற்றியும் இதன் தயாரிப்பாளர்கள் பறியுமான ஊகம் ஒன்றிற்கு வந்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பூமியில் இருந்து இவ்வாறான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டதை நினைத்து நீங்கள் வருத்தப்படக்கூடும். அதுவும் வியாபார நோக்கத்திற்காக அன்றி மாணவர் குழு ஒன்று இவ்வாறான கேவலமான திரைப்படம் ஒன்றை தயாரித்து தமது கேவலமான மனநிலையையும் சமூக அக்கறையையும் எல்லோருக்கும் வெளிக்காட்டி உள்ளார்கள். இத்திரைப்படம் தொடர்பாக உதவும் எண்ணமுள்ளோர் உங்கள் எண்ணத்தை மாற்றி இவ்வாறான மோசமான திரைப்படங்கள் இனிமேலும் வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் உதவுமிடத்து நாளை இதுவே தவறான முன்னுதாரணமாகி பல்வேறு திரைப்படங்களின் வருகையைச் சாத்தியமாக்கிவிடக்கூடும். நீங்கள் வழங்க நினைக்கும் பணத்தை வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு வழங்குவதன் மூலம் உங்களது நல்லெண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஊரோடி பகீக்கு,
இவ்வாறான தவறான விடயங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் மதிப்பை இழக்கிறீர்கள். அறிமுகம் என்பதற்கு அப்பால் ஒருவித பிச்சை எடுக்கும் மனநிலையை உங்களது பதிவு எமக்கு ஏற்படுத்தியது. இது தொடர்பாக கவனமெடுக்குமாறு வேண்டுகின்றோம்.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட தமிழ்ச்சமூகத்திற்கு, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பு இருக்கின்றதா? இவ்வகையான விடயங்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா என்பதை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம். பல்கலைக்கழகங்க வளாகங்களுக்குள் நடைபெறும் விடயங்கள் பொதுச்சமூக வெளிக்கு வரும்போது அது தீவிர விமர்சனத்துக்கு உட்படுத்தப்படும். நீங்கள் பொது வெளியில் இவ்வாறானதொரு விடயத்தை அனுமதிப்பதன் மூலம் சமூக பொதுவெளியில் உங்களது நற்பெயரை இழக்கின்றீர்கள். இது தொடர்பாக உங்களது கருத்தைத் தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

இவ்வாறான மாணவர்களின் செய்கைக்கு காறித்தூப்புவதினூடாக இவ்வாறான விடயங்கள் மேலும் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவோம்.

ஊரோடியின் பதிவைப் பார்வையிட... இங்கே 'கிளிக்' செய்யவும். X-GRP