Friday, November 2, 2007

ராகிங் :- விளையாட்டல்ல விபரீதம்

-சேவியர்-

பள்ளிப்படிப்பை முடித்து கனவுகளுடன் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களின் முன்னால் விஸ்வரூபமெடுத்து ஒரு அரக்கனைப் போல கோரப் பற்களுடன் ஆக்ரோஷமாய் நிற்கிறது ராகிங்.

மூத்த மாணவர்களுக்கு பொழுது போக்காக இருக்கும் ராகிங் புதிய மாணவர்களை பல விதங்களில் கொடுமைப்படுத்துகிறது. ஆடல், பாடல் செய்யச் சொல்லும் சிறு ராகிங் துவங்கி, அவர்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் அதிகபட்ச வன்முறை வரை பெரும்பாலான கல்லூரிகளிலும், விடுதிகளிலும் இன்று ராகிங் கொடிகட்டிப் பறக்கிறது.

ராகிங் தொல்லையால் உயிரை இழந்தவர்களும், ராகிங் அவமானத்தினால் உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் அனேகர். இரவு பகல் கண்விழித்துப் படித்து, பெற்றோரின் கனவுகளையும், தங்கள் எதிர்கால இலட்சியங்களையும் தாங்கி கல்லூரி வளாகத்துக்குள் வரும் இளைய சமூகத்தை அவமானத்துக்கும், மரணத்துக்கும் அனுப்புகிறது ராகிங் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கிபி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் கிரேக்கர்களின் விளையாட்டுத் துறையில் இந்த ராகிங் செயல்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டு உத்வேகத்தை வளர்க்கவும், உள்ளுக்குள் வீரியம் பெறவும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் இவை ராணுவ வளாகங்களுக்குள் புகுந்து கைதிகளை ராகிங் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கல்வி நிலையங்களில் ராகிங் பெருமளவு நடைமுறையில் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் மிகவும் அதிக அளவில் ராகிங் செயல்முறைப் படுத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. கார்னெல் கல்லூரியில் 1873 ம் ஆண்டு நிகழ்ந்த மரணமே ராகிங் கொடுமையின் முதல் இரத்த சாட்சி!

முதலாம் உலகப் போருக்குப் பின் இந்த ராகிங் மேலும் அதிகமாக வளர்ந்து ராணுவ கூடாரங்களில் நிகழும் ராகிங் கொடுமைகள் கல்லூரிகளிலும் நுழைந்தன.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி ராகிங் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது எனலாம். எனினும் அது கிளைவிட்டுப் படர்ந்தது என்னவோ சுதந்திரம் கிடைத்த பின்பு தான்.

எனினும் அறுபதுகளின் இறுதி வரை ராகிங் இந்தியாவில் பெரிய பிரச்சனையாய் இருக்கவில்லை. காரணம் அப்போது கல்வியறிவும், உயர்கல்வியும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பெறும் நிலை இருந்தது. அந்த கலாச்சார, மத, இன வேறுபாடற்ற சூழல் ராகிங்கை அதிகம் வளர்க்கவில்லை. பல்வேறு மத, கலாச்சார மக்கள் கல்லூரிகளை நாடியபின்பு தான் இவை வேகமாய் வளர்ந்தன.

ராகிங் கொடுமை என்பதுகளில் இந்தியாவில் பெருமளவில் வளர்ந்தது. அதற்கு ஊடகங்களும் ஒருவகையில் காரணம் எனக் கொள்ளலாம். பரவலாக எண்பதுகளில் வளர்ந்த ராகிங் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளின் படையெடுப்பான தொன்னூறுகளில் அசுர வேகம் கொண்டது. ராகிங் மரணங்கள் ஆங்காங்கே வெளியே தெரிய ஆரம்பித்தன.

ராகிங் சட்ட விரோதமானது. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் கிரிமினல் சட்டத்தின் கீழ் நிறுத்தப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பான சட்டத்தை தற்போது இயற்றியுள்ளது. ராகிங் கொடுமைகளை அனுபவித்தவர்களுக்கு இந்த சட்டம் மிகுந்த ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

ராகிங்கை ஆய்வாளர்கள் மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது வார்த்தை ரீதியிலான ராகிங். இதில் புதிய மாணவர்களை பாடச் செய்வதும், கேலி பேசுவதும், பெண்களிடம் அவர்கள் வெட்கப்படும்படியாகவும் அவமானப்படும் படியாகவும் கேள்விகளைக் கேட்பதும். அவர்களிடம் கெட்ட வார்த்தைகளைப் பேசச் சொல்வதும் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

பெரும்பாலான கல்லூரிகளில் வார்த்தை ரீதியிலான ராகிங் உச்சகட்டத்தில் நடக்கும். இதில் அவமானமும், மன அழுத்தமும் அடைந்து புதிய மாணவர்கள் தலை குனிவதைப் பார்ப்பதில் மூத்த மாணவர்களுக்கு ஒரு குரூர திருப்தி.

இரண்டாவது உடல் ரீதியிலான ராகிங். ஒரு காலால் நிற்கச் சொல்வது. விடுதிகள் எனில் அறையைச் சுத்தம் செய்யச் சொல்வது, மூத்த மாணவர்களின் காலை அமுக்கச் செய்வது, புதிய மாணவர்களை அடிப்பது, உதைப்பது என இதில் பல வகை.

இந்த ராகிங் ஒரு எல்லையைத் தாண்டும் போது உடல்ரீதியிலான பல காயங்களையும், சில வேளைகளில் மரணத்தையும் தந்து விடுகின்றது. வார்த்தை ராகிங் வலுவடைந்து உடல்ரீதியான ராகிங்கிற்குள் நுழைவது வெகு சகஜம்.

மூன்றாவது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல். இது உளவியல் ரீதியாக புதிய மாணவர்களை மிகவும் துன்புறுத்தக் கூடிய ஒன்று. பெரும்பாலான தற்கொலைகள் இந்த ராகிங் காரணமாகவே நிகழ்கின்றன. ஆடைகளை அவிழ்க்கச் செய்வது இந்த வகை ராகிங்கில் நிகழும் குறைந்த பட்ச நிகழ்வு எனில் மற்றவற்றை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையுமே ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகின்றன என்று சொல்லலாம். வார்த்தைகளில் ஆரம்பித்து வன்முறை பாலியல் தொந்தரவு என எல்லா வட்டங்களுக்குள்ளும் இந்த ராகிங் நுழைந்து விடுகிறது.

ராகிங் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் என்னும் போலித்தனமான வாதத்தை முன்வைத்து இன்று ராகிங்கிற்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது.

ஒன்றாம் வகுப்பில் ராகிங் நடக்கவில்லை. ஆரம்பப் பள்ளிகளில் ராகிங் நடக்கவில்லை. அங்கெல்லாம் மாணவர்களிடம் ஒற்றுமை இல்லையா ? பெரிய அலுவலகத்தில் வேலைக்குச் செல்கிறீர்கள். உயரதிகாரி உங்களை ஆடை அவிழ்க்கச் சொன்னால் அதை ஒற்றுமை வளர்க்கும் செயல் என்று எடுத்துக் கொள்வீர்களா ?

ராகிங் ஒரு அப்பட்டமான வன்முறை. எந்த விதத்தில் ராகிங் செயல்படுத்தப் பட்டாலும் அதில் நன்மை கடுகளவும் இல்லை என்பதே உண்மை. ராகிங் தொல்லையை ஒழிக்க கல்லூரிகளும் விடுதி நிர்வாகமும் முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

ராகிங் கிராமப்புறங்களிலுள்ள கல்லூரிகளில் பெரும்பாலும் நிகழ்வதில்லை. நகர்ப்புறங்களில் தான் இவை மிகவும் அதிகம். அதுவும் விடுதிகளில் மிக மிக அதிகம்.

மூத்த மாணவர்கள் தங்கள் கடமைகளை உணரவேண்டும். இளைய மாணவர்கள் தங்கள் கடந்த கால ராகிங் கொடுமைகளுக்கு வடிகால் தேடும் விதமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனாலும் ராகிங் சகஜம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கவே பலர் முயல்கின்றனர்.

உளவியல் ரீதியாக மாணவர்களை மிகவும் துன்புறுத்தி அவர்கள் மனதில் ஆறாக் காயத்தை உண்டாக்கி அவர்களுடைய எதிர்காலத்தையே வலிமிகுந்ததாக்கும் வல்லமை ராகிங்கிற்கு உண்டு என்கின்றனர் உளவியலார்.

ராகிங் தாக்குதலுக்கு ஆளாகும் பெரும்பாலானோர் இவற்றை கல்லூரி நிர்வாகத்திடமோ, காவல்துறையிடமோ சொல்வதே இல்லை. தங்களுடைய அவமானத்தை சபையேற்றம் செய்வதை அவமானமாய் இவர்கள் கருதுவதில் நியாயம் இருந்தாலும், இப்படி அறியப்படாமல் போகும் தவறுகள் தவறு செய்பவர்களுக்கு ஊக்கத்தை அளித்து விடுகிறது.

ராகிங் புதிய மாணவர்களை வலிமையானவர்களாக மாற்றும் என்னும் ஒரு சமாளிப்பையும் ராகிங் ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். இது அவர்களுடைய சிந்தனைகளில் வன்முறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவான ராகிங் வழக்குகளில் 62 விழுக்காடு உடல்சார்ந்த வன்முறை எனவும், 33 விழுக்காடு பாலியல் சார்ந்த வன்முறை எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வார்த்தை ரீதியிலான துன்புறுத்தல் எங்கும் இல்லை இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. வார்த்தை ரீதியிலான துன்புறுத்தல்கள் பெரும்பாலும் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பதே உண்மை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பதினோரு பேர் ராகிங் கொடுமையினால் இறந்து போயிருக்கிறார்கள். பத்துபேர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்கள். 35 பேர் காயமடைந்திருக்கிறார்கள் பலர் கல்லூரியை விட்டு விலகியிருக்கிறார்கள். இவையெல்லாம் ராகிங் வெறும் விளையாட்டு என்று சொல்பவர்களை சிந்திக்க வைக்கும் சில நிகழ்வுகள்.

ராகிங் கொடுமைக்குப் பயந்து சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் இரண்டு மாதங்கள் கல்லூரிக்கே அனுப்பாமல் இருப்பது கூட உண்டு.

பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக், கலைக்கல்லூரிகள் என பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் ராகிங் நடந்தாலும் பொறியியல் கல்லூரிகளில் தான் அதிக பட்சமாக 35 விழுக்காடு ராகிங் தொல்லைகள் நிகழ்கின்றன.

கல்லூரிகளையும் விடுதிகளையும் ஒப்பிட்டால் 84 விழுக்காடு ராகிங் வன்முறைகள் விடுதிகளில் தான் நடக்கின்றன எனும் அதிர்ச்சித் தகவலையும் ஆய்வுகள் வெளியிட்டிருக்கின்றன.

ராகிங் விளையாட்டுத்தனமானது, காயப்படுத்தாதது, மூத்த மாணவர்களோடு ஒற்றுமையை வளர்ப்பது, உறவுகளைப் பலப்படுத்துவது புதிய மாணவர்களை துணிச்சல்காரர்களாக்குவது எனும் விதண்டாவாதங்களை ஒதுக்கும் விதமாகத் தான் வந்திருக்கிறது ராகிங் கை கிரிமினல் வழக்காகப் பதிவு செய்ய வழிகோலும் சட்டம்.

பெரும்பாலான கல்லூரிகள் ராகிங் பிரச்சனைகளை அறிந்தாலும் கல்லூரியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தங்களுக்குள்ளேயே அவற்றை பூசி மெழுகப் பார்ப்பதுண்டு. இதனால் பெரும்பாலான பிரச்சனைகள் கல்லூரி எனும் வளாகத்துக்குள்ளேயே நீதி காணாமல் புதைபட்டுப் போய்விடுகிறது.

2001ம் ஆண்டே ராகிங் அரசினால் தடை செய்யப்பட்ட போதும் துயர நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 211 வழக்குகள் ராகிங் கொடுமையினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை முற்றிலும் களையப்பட கல்லூரி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

ராகிங் பிரச்சனைக்கான முக்கியமான காரணங்களாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

* கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற ஒரு கொடிய செயலாக ராகிங் சமூகத்தில் நினைக்கப்படுவதில்லை. அது இலகுவாகவே பெரும்பாலும் பார்க்கப் படுகிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாணவர்கள் படும் அவஸ்தை வெளியே தெரிவதில்லை.

* கல்லூரி நிர்வாகம் ராகிங் இருப்பதை பெரும்பாலும் மறைத்து விடுகிறது, காரணம் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதும், கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமோ என பயப்படுதலுமே.

* ராகிங் செய்யும் மாணவர்களை புதிய மாணவர்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று தெளிவான விதிமுறைகள் எங்கும் இல்லை. கல்லூரி நிகழ்வுகளுக்கு காவல்துறையை எப்போது அணுகவேண்டும் என்னும் விளக்கங்களும் பெரும்பாலும் இருப்பதில்லை. கல்வி நிறுவனங்களும் காவல்துறையின் தலையீடு கல்லூரிக்குள் நுழைவதை விரும்புவதில்லை.

* பெற்றோர் பெரும்பாலும் ராகிங் பிரச்சனையின் ஆழத்தை அறிவதில்லை கல்லூரியில் நிகழும் சிறு கேளிக்கை விளையாட்டு எனுமளவிலேயே பொதுவான சிந்தனை கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பெற்றோருடன் சகஜமாகப் பகிர்ந்து கொள்வதில்லை.

* பொதுமக்களும் ராகிங் என்பதை ஒரு விளையாட்டாகவே கருதுகிறார்கள். விடுதிகள் நிகழும் அதிகபட்ச பலாத்காரங்களைக் குறித்து அவர்கள் அறிவதில்லை.

* கல்லூரி நிர்வாகம் ராகிங் பிரச்சனையில் இறங்க ஏதேனும் காரணங்களுக்காய் பயப்படுகிறது, அல்லது தவிர்க்க நினைக்கிறது.

* ராகிங் குறித்து சரியான ஆய்வுகளோ, தகவல்களோ, விழிப்புணர்வோ மக்களிடம் இல்லை.

* ராகிங் குற்றத்துக்கான தண்டனைகள் பொதுவாக கல்லூரியை விட்டு நிறுத்துவதாக இருக்கும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நிலை வரவேண்டும். காவல்துறை ராகிங் வழக்குகளை முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்க வேண்டும்.

புதிய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டியவர்கள் அவர்களை ராகிங் மூலம் நிர்மூலமாக்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

தற்போது பல கல்லூரிகள் ராகிங் பிரச்சனைக்கு முடிவு கட்ட மும்முரமாய் இறங்கியிருப்பது வரவேற்கத் தக்கதே. எல்லா கல்லூரிகளும் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

* சில கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என பெற்றோரிடம் உறுதிப்பத்திரம் வாங்கிக் கொள்கிறார்கள். இது பெற்றோருக்கும் ராகிங் பிரச்சனையில் அதிக பொறுப்புணர்ச்சியை அளிக்கும்.

* சில கல்லூரிகளில் புதியவர்களுக்கு வகுப்புகள் ஓரிரு வாரங்கள் முன்னதாகவே துவங்கிவிடுகின்றன. இதன் மூலம் புதிய மாணவர்கள் கல்லூரி வளாகம், ஆசிரியர்கள், சூழல் குறித்த நல்ல அறிமுகம் பெற முடியும். இவை ராகிங் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு மாணவர்களைத் தயாராக்கும்.

* பெரிய அலுவலகங்களில் நடைபெறும் ‘buddy’ முறைபோல கல்லூரிகளிலும் ஏற்படுத்த வேண்டும். அதாவது புதிய மாணவர்கள் கல்லூரிகளில் வரும்போது மூத்த மாணவர் ஒருவனை இளைய மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாய் நிர்ணயிக்க வேண்டும். அவர் கல்லூரியில் இளைய மாணவர் சகஜமாக படிக்க உதவ வேண்டும். இந்த வழக்கம் மேலை நாடுகளில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

* விடுதிகள் இருக்கும் இடங்களில் விடுதிகளில் தங்கும் மாணவர்கள், அவர்களுடைய அறை எண் போன்ற விவரங்களை கல்லூரி வலைத்தளத்திலோ, கல்லூரி வளாக அறிவிப்புப் பலகையிலோ பதிவு செய்வதும் சிலரால் பரிந்துரைக்கப்படுகிறது.

* ஊடகங்கள் ராகிங் குறித்து மிகவும் கவனமுடன் செய்திகளை வெளியிடவேண்டும். ராகிங் கிரிமினல் குற்றம் என்பதும், அது சமூகத்துக்குத் தேவையற்றது என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கலாச்சாரங்கள் பெரும்பாலும் சமூகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை நிரூபிக்கும் பட்டியலில் ராகிங்கும் இணைந்திருக்கிறது.

வெறும் சட்டத்தினால் மட்டும் ராகிங் முழுமையாக கட்டுக்குள் வந்து விடும் என்று சொல்ல முடியாது. சமூகத்தில் ஏற்படும் விழிப்புணர்வே முழுமையான பலன் தரும். சமூக அக்கறை மேலெழும்பும் போது கல்லூரி நிர்வாகங்களும் ராகிங் தடுப்பு முயற்சிகளில் முழுமையாய் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படும்.

ராகிங் நாகரீக சமூகத்தில் உலவும் காட்டுமிராண்டித்தனம், எதிர்ப்போம், வலிமையான எதிர்காலம் படைப்போம்.

நன்றி:கவிதைச்சாலை

1 உரையாடல்:

Anonymous said...

எனது கட்டுரையை மறு பிரசுரம் செய்தமைக்கு நன்ன்றி.

http://sirippu.wordpress.com