Sunday, November 4, 2007

பின்னவீனத்துவ ஆசிரியம்

பேராசிரியர்.சபா.ஜெயராசா
கல்வியியல் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பின்னவீனத்துவ ஆசிரியம் எல்லை நிலை ஆசிரியம் [Border Pedagogy] முதலாம் எண்ணக்கருக்கள் பின்னவீனத்துவின் வளர்ர்ச்சியை அடியொற்றி மேலெழத்தொடங்கியுள்ளன. அந்தஸ்து நிலையிலும் இனக்குழுமநிலை, பால்நிலை முதலியவற்றிலும் ஓரங்கட்டப்பட்டவர்களைக் குவியப்படுத்தும் கல்வி முன்னெடுப்புகளை பின்னவீனத்துவ ஆசிரியம் வலியுறுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்று மேலெழுந்துள்ள பன்முகப் பண்பாட்டு கல்வி நடைமுறைகள் [Multicultural Practices] பின்னவீனத்துவத்தை நோக்கிய கற்றல் கற்பித்தல் முன்னெடுப்புகளாக அமைகின்றன.

சமகாலத்து அமெரிக்கக் கல்விச் சிந்தனையாளராகிய ஹென்றி ஏ.கி.றொக்ஸ் [Henry A.Giroux] என்பார் பின்னவீனத்துவக் கல்வி நடைமுறையிலே தீவிர ஈடுபாடுகாட்டி வருகின்றனர். தனது கருத்துக்களை வலியுறுத்துவதற்கு அவர் பின்வரும் பின்வரும் மேற்கோள்களை முன்னெடுக்கிறார். [Henrg.A.Giroux, [1991], Towards Postmodern Pedogogy, Albany, State university of New York press]

(அ)
நாடக எழுத்தாளரும், ஒரு காலத்தில் சிறைக் கைதியாகவும், பின்னர் செக்கோசிலோவாக்கியாவின் அதிபராகவும் இருந்த ஹேவல் "மக்களாட்ச்சிக் கோட்பாடு இலட்சிய வடிவில் நிறைவடைந்தது என்று கொள்ளப்பட்டாலும் அதனுள்ளே விடுதலைக்கும் மனித மாண்புகளுக்குமான நெருக்குவாரங்களும் போராட்டங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன" என்றார்.

(ஆ)
வரலாற்றாசிரியரும் சமாதான வினைஞருமாகிய ஈ.பி.தோம்சன் "இருபது ஓராம் நூற்றாண்டில் மானிடம் எதிர்கொள்ளப்படவேன்டியிருக்கும் பிரச்சினைகளுக்கும் வழிவகைக்கும் முகம் கொடுக்கக் கூடியவாறு வரலாற்று பக்கங்களை மூடிவிடாது திறந்து வைக்க வேண்டியுள்ளது." என்று விளக்கியுள்ளார்.

(இ)
போலந்தின் தொழிலாளர் காப்புக் கழகத்தின் நிறுவுனராகிய அடம்மிச்சினிக்(adam Michnik) "மக்களாட்சி அரசியல் பற்றிய பயமும் மக்கள் தொகுதியிலே நிகழ்ந்துவரும் பெருநிலையான கூட்டுப் பரிதவிப்பு அவலமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த வண்ணமுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களாட்சி மீது விடுவிக்கப்பட்டுள்ள இந்தக்கணைகளைப் புறந்தள்ளிவிடாமல் கருத்து வினைப்பாட்டுக்கு எடுக்க வேண்டிய தேவையை கிறொக்ஸ் வலியுறுத்துகின்றார்.

மக்களாட்சி கோட்பாடு தனிமைப்பட்டு விட்டது, செயலிழந்து விட்டது, திக்குமுக்காடுகின்றதென பின்னவீனத்துவ ஆசிரியம் கருதுகின்றது. பொருத்தமற்ற ஓர் அரசியல் சிறைக்குள் மக்கள் சிக்கிக் கொண்டதாக எண்ணுகின்றனர். இந்நிலையில் மக்களாட்ச்சிக்கு உயிர்ப்பூட்டுவதற்கான கல்வி பற்றிய நோக்கு பின்னவீனத்துவக் கல்வியாளர்களிடத்து மேலோங்கியுள்ளது. வலுவிழந்து, இலட்ச்சியங்களைச் சுற்றிப் பின்தள்ளி வைத்திருக்கும் மக்களாட்சி நிலையைக் கல்விச் செயற்பாட்டினால் மட்டும் மற்றியமைக்க முடியுமா என்பது மறுபுறம் கேள்விக்குறியாகி நிற்கின்றது.

இந்நிலையில் பின்னவீனத்துவக் கல்வி பற்றிய பின்வரும் முன்மொழிவுகளை கிரொக்ஸ் முன்வைக்கின்றார்.

(அ)
அவரது முன்மொழிவுகளில் முதற்கண் திறனாய்வு அல்லது விமர்சன ஆசிரியம்[Critical Pedagogy] என்ற எண்ணக்கரு மேலெழுகின்றது. நல்ல பிரசைகளை உருவாக்குவதற்குரிய கற்பித்தல் நடைமுறை எனபவற்றைக்காட்டிலும், அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்கள் முதலியவற்றை விமர்சனப் பாங்குடன் அணுகச் செய்தல். நடைமுறையில் உள்ள சமூக அரசியல், முறைமைகளோடு இசைவுபட்டு இணங்கிச் செல்லாது. நடைமுறையிலுள்ள சமூக அரசியல் வடிவங்கள் மீது அறைவுகூவல் விடுப்பதற்கும், அவற்றை நிலை மாற்றம் செய்வதற்குமான திறனாய்வுக் கொள்ளளவை கல்விச் செயற்பாடுகள் வாயிலாக வளர்த்தல்.

வரலாற்றில் தாம் எங்கே நிற்கின்றோம் என்பதை உணர்த்துவதுடன், மக்களாட்சி வெகுசன வடிவங்களுக்கு உரியதான குரலை வெளிப்படுத்துவதற்குரிய ஆற்றலை முன்னெடுத்தல் வேண்டும். மக்களாட்சி பொது வாழ்க்கைக்குரிய கருத்து வினைப்பாட்டில் உயிர்ப்புள்ள பங்குபற்றுனராக மாணவரை உருவாக்குதல் வேண்டும். திறனாய்வு ஆசிரியம் மேற்கொள்ளும் வினைப்பாடு நடப்பியல் விவகாரங்கள் மீது பொருத்தமான வினாக்களை எழுப்புதலுடன் தொடர்புடையாது.

(ஆ)
பரந்த சமூகத்தை அணுகுவதற்குரிய பன்முக கருத்து வினைப்பாடுகளை (Discourses) நன்கு விளங்கிகொள்வதற்கும், தமது தொடர்புகளை மாணவர்கள் வடிவமைத்துக் கொள்வதற்குமுரிய ஏற்புடமைகள் அவசியமாகின்றன. வேறுபட்ட அறக்கருத்து வினைப்பாடுகளுடன் மாணவர்கள் தமது அனுபவங்களை எவ்வாறு பங்கீடு செய்து கொள்கின்றார்கள் என்பது அவதானிப்புக்கு உரியது. மனித அவலங்களையும் சுரண்டல்களையும் சமூக இடைவினைகள் தரைதட்டி நிற்றலையும் உணர்த்த வேண்டியுள்ளது. அதிகாரத்தொடர்புகள், சமூகநடைமுறைகள், அந்தஸ்து முதலியவற்றை அடியொற்றிய அறம் சார்ந்த உரைவினைப்பாடுகளேஎ சமகாலத்தில் வேஎண்டப்படுகின்றன.

பின்னவீனத்துவ ஆசிரியம் பற்றிய கருத்துகளை முன்மொழிந்தவர்களுள் சறொன் உவெல்ஸ் என்பவரும் குறிப்பிடத்தக்கவர் (Sharon Welch - 1991- In Postmodernism) பின்னவீனத்துவ ஆசிரியத்துவம் அறநிலையில் அறை கூவல் விடுப்பதாயும் அரசியல் நிலையில் நிலைமாற்றத்தை உள்ளடக்கியதாயும் இருத்தல் வேண்டுமென்பது அவரது கருத்து. பன்முகப்பட்ட நிலைகளிலும், முரண்பாடான நிலைகளிலும் மாணவர் தம்மை இனங்காணலையும் அகவய நிலைகளையும் எவ்வாறு கட்டுமை (Construct) செய்கிறார்கள் என்பது விளங்கிக் கொள்ளப்படவேண்டியுள்ளது. குழுக்களிடையே காணப்படும் தொடர்புகள் எவ்வாறு அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகள் பராமரிக்கபடுகின்றன என்பது விமர்சன ஆசிரியம் கவனத்திற் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

செறி ஹோம்ஸ் (Cherryholms, 1988) என்பவர் பின்னவீனத்துக்குரிய திறனாய்வு ஆசிரியம் பற்றி விளக்கும் போது, அரசியல் அதிகாரம், நீதி, போராட்டம், சமத்துவ அழிவு முதலியவற்றை வெறுமனே ஏட்டுக்குள் சுருக்கி விடமுடியாத மொழியின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

கலைத்திட்ட உள்ளடக்கம் புனிதமானது என்ற ஆசாரங்கள் கைவிடப்பட்டு, பல்வேறு உரையங்களை (Narratives) உருவாக்கும் வகையில் மீளவாசிக்கப்படவும் வேறுபட்ட அரசியலுக்குரியவாறு மீள்வடிவமைக்கப்படவும் வேண்டும் என்பது ஹோம்சின் கருத்து.

மாணவர்களுக்குத் தகவலைக் கடத்தும் வடிவமாக அறிவைக் கருதாது, அதன் வரையறைகளும், தொழிற்பாடுகளும் தொடர்ந்து மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தனி மனிதரும் சமூகத்தினதும் விடுதலையை நோக்கி நகர்வதற்க்குரிய பொருண்மிய நிலவரங்களை திறந்த கருத்துப் பரிமாற்றம், கருத்துவினைப்பாடுகளை மக்கள் மயப்படுத்தல் என்பவற்றால் ஏற்படுத்துதல் இன்றியமையாதது. பொது வாழ்க்கையை மேம்படுத்துவதற்குரிய மக்களாட்சிக்கட்டமைப்பை உருவாக்குவதற்குரிய பன்முக உரையங்களை ஏற்படுத்தல் வேண்டுமென பிறிதொரு பின்னவீனத்துவக் கல்வியியலாளராகிய லக்கிளவ் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பின்னவீனத்துவக்கல்வியில் வலியுறுத்தப்படும் திறனாய்வு ஆசிரியம் கற்கை நெறிகளைப் பிரித்து வைக்கும் எல்லைகளை உடைத்துவிடுகின்றது. அது வெறுமனே அறிவாய்வியல் எழுகூற்றுக்களுடன் (Issues) அடங்கி நிற்கவில்லை. அதிகாரம், அரசியல், அறம் முதலியவற்றோடு இணைந்த வகையில் பின்னவீனத்துவ ஆசிரியம் கட்டுமை செய்யப்படுகிறது.

இங்கே எதிர்நினைவு (Counter Memory) ஆசிரியம் வலியுறுத்தப்படுகின்றது. ஒருவகைப்பட்டதும் கூட்டுமொத்தமாகத் திரட்டப்பட்டதுமான அழுத்தங்களின் மத்தியில் மெளனமாகி மூடியிருந்தோரின் குரல் எதிர் நினைவுகளால் மீட்டெடுக்கப்படுகின்றது. அதிகாரம் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை அடியொற்றிய உரைவினைகளில் இருந்துதான் கல்வியும் பன்பாடும் விளக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையிலேதான் படசாலைகள் உருவாக்கும் விழுமியங்களையும் இனங்காணல் வேண்டும்.

தனது வரலாற்றுக் கட்டமைப்பையும் கருத்தியலையும் மறுத்தலித்து நிற்கும் உண்மைகளை மீளாய்வுக்கு உட்படுத்துதலே பொருத்தமான ஆசிரியமாகின்றது. கருத்துவினைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நியாபித்தலை வலியுறுத்துதல் பொருத்தமற்றது. சமூக இருப்பில் இருந்தும், தொடர்புகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பதன் மீது கல்வியியலாளர்கள் கவனம் கொள்ளல் வேண்டுமென பின்னவீனத்துவவாதிகள் குறிப்பிடுவது அவர்கள் மீது மார்க்சீயம் செலுத்தும் செல்வாக்கினை வெளிப்படுத்துகிறது.

கற்பித்தல் மிழிபற்றிய கவன ஈர்ப்பும் பின்னவீனத்துவ வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நோக்கி மொழி திருப்பவில்லை மாறாக மனோரதியப் பழைமையை நோக்கிப் பின்னே நகர்ந்த வண்ணமுள்ளது.

ஆசிரியர்கள் ஒடுங்கிய வாண்மை கட்டமைப்பை உடைத்து கொண்டு வெளிவரவேண்டியுள்ளது. இலட்சியங்களையும் சமூக நடைமுறைகளையும் உருவாக்கும் சமூக வேலையாட்கள் என்ற நடிபங்கை அவர்கள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. அதாவது, நிலைமாற்றத்தை மேற்கொள்ளும் நுண்மதியாளர்களாக அவர்கள் மாற்றமடைய வேண்டியுள்ளது. கல்வித்துறையின் உள்ளார்ந்த திறனாய்வுகளுக்கு ஆசிரியர்கள் முகம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் கையளிப்பவர்களாக ஆசிரியர்கள் தொழிற்படாது செயலூக்கமுள்ள அறிகைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோராய் இருத்தல் வேண்டும். ஒடுக்குமுறைகளை மீறி மேலெழுவதற்குரிய ஆசிரியமே சமகாலத்தில் வேண்ட்றப்படுகின்றது.

தனியாள் நிலையும் அரசியல் தொடர்புகளும் வலுவான பண்புகளை உருவாக்குமேயன்றி கவிழ்ந்து விடும் வீழ்ச்சிகளை ஏற்படுத்த மாட்டாது. பாலியல் சார்ந்த, வர்க்கம் சார்ந்த, இனத்துவம் சார்ந்த சுரண்டல்களை முன்னெடுக்கும் நிறுவனச் செயற்பாடுகளைக் கண்டு பின்வாங்கிவிடாது செயற்படுவதற்கு மேற்கூறிய ஒன்றிணைப்பு அவசியமாகின்றது.

அரசியல் மயப்பாட்டின் அடிப்படை தளமாகத் தன்னிலை முதற்கண் அமைகின்றது. வேறுபட்ட சமூக, பண்பாட்டு வரலாற்றுப் பின்புலங்களில் தன்னிலை இனங்காணல் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது பற்றிய பரந்த விளக்கம் வேண்டப்படுகின்றது. இவை பற்றிய தெளிவு கல்விச் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றது.

பலநிலை இனங்காணற் செயற்பாடுகள் மாணவர்களிடத்து இடம் பெறுகின்றன. மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் புறம் தள்ளி நீதியானதும், சமத்துவத்தை நிலைநிறுத்தக் கூடியதுமான, வலுக்கட்டமைப்பை மாணவர்களிடத்து ஏற்படுத்தக் கூடிய உரையாடலை ஆசிரியம் வழங்குதல் வேண்டும்.

பரந்த மக்கள்நிலை அரசியல் ஈடுபாட்டுக்குரியவாறு அனுபவங்களைக் கோட்பாடு நிலைக்கு மாற்றுவதன் மீது விமர்சனப்பாங்கான கவன ஈர்ப்பு அவசியமாகின்றது. பாதிப்பும் பழிவாங்கலும் பற்றிய கதைகளை ஒப்புவித்துக்கொண்டிருப்பதால் பயன் எதுவும் கிட்டப்போவதில்லை. அவற்றைக் கோட்பாட்டு நிலையில் தீவிர பகுப்பாய்விற்கு உட்படுத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவற்றைப் பொருத்தமான முறையிலே ஒருங்கிணைப்புச் செய்யமுடியும்.

பின்னவீனத்துவக் கல்வியியலாளர்கள் கல்வியியலில் குறிப்பிட்ட சில குவியங்களை நோக்கிய மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கின்றனர். எல்லை நிலையில் உள்ளானவர்கள், சுரண்டலுக்குள்ளானவர்கள், பெண்கள், இனத்துவ நிலையிலும், பண்பாட்டுநிலையிலும் பின் தள்ளப்பட்டவர்கள் முதலியோரைக்குவியப்படுத்தும் கல்விச்செயற்பாடுகளில் வலியுறுத்தியுள்ளனர். மேற்கூறிய துறைகளில் பலமிழந்து நிற்கும் மேலைபுலக் கல்வி நடவடிக்கைகளுக்கு "இலட்சியச் சிகிச்சை" அவர்களால் வழங்கப்பட்டது.

நன்றி: அகவிழி

2 உரையாடல்:

Anonymous said...

hey who do you think you are? Do you really know what is pinnaveenatthuvam!?

said...

அனானி நண்பருக்கு வணக்கம்..
1.
முதலில் மேற்படி பிரதி எங்களது குழுவைச் சார்ந்த எவராலும் எழுதப்பட்டது அல்ல. அதை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்திருந்தோம். இணையத்தில், எங்களது நோக்கம் சிறுவர் உரிமை மற்றும் மாணவர் கல்வி தொடர்பான விடயங்களில் பரந்த மட்டத்திலான உரையாடல்களை ஆரம்பிப்பதே. அதன் தொடக்க புள்ளியாவே வெவ்வேறு இடங்களில் காணப்பட்ட சில பிரதிகளை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். அதிலிருந்து உரையாடல் ஒன்றை ஆரம்பிப்பதே எமது நோக்கமாகும். எமது குழுவினரால் தயாரிக்கப்பட்ட பிரதிகள் விரைவில் வெளிவிடப்படும்.
அது சிறுவர் உரிமை மற்றும் மாணவர் கல்வி தொடர்பாக எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி வெளிவரும். அவ்வகையில் சிலவகையான அம்பலப்படுத்தல்களும் தவிர்க்க முடியாதைவையே.

2.
உங்களது பின்னூட்டத்திற்கு வருவோமேயானால்,ஒரு பிரதியை விமர்சனபூர்வமாக அணுகும் செயற்பாட்டை மிகவும் விரும்புகின்றோம். சமூகத் தளத்தை முன்வைத்து அதனூடாக நிகழ்த்தப்படும் உரையாடல்கள் மூலம் எமக்கு பொருத்தமான, செயற்பாட்டுக்கு உகந்ததான கருத்துநிலைக்கு வரலாம் என நினைக்கின்றோம். நீங்கள் உரையாடலை நிகழ்த்துங்கள் உங்களது கருத்துக்களையும் உள்வாங்கியபடி எமதும் மற்றையவர்களினதும் உரையாடல்கள் தொடரும். அதன் மூலமே ஆரோக்கியமான கருத்துநிலைக்கு வரமுடியும். உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.

3.
மேற்படி பிரதியானது மாண்வர்களை ஆசிரியம் அணுகும் மற்றும் கற்பித்தல் முறைகளில் ஏற்படவேண்டிய\ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றம் மற்றும் கல்வித்திட்ட வடிவமைப்பு முறைகளின் பால் கொண்டுள்ள விமர்சனம், பொதுமைப்படுத்தப்பட்ட கல்விச்செயற்பாடுகளினால் ஏற்பட்ட குறைகளை மறுத்து கல்விச்செயற்பாடுகளை எல்லைக்கு குவிக்க வேண்டிய தேவை என்பன பற்றிய உரையாடலுக்கான தொடக்கப்புள்ளியை எம்முன் விட்டுச் சென்றுள்ளது. அதிலிருந்து உரையாடலை ஆரம்பிக்க வேண்டியது நாமே. அனானி நண்பரைத் தொடர்ந்து நாம் அதனைத் தொடரலாம் என நினைக்கின்றோம்.