Friday, October 24, 2008

நூல் அறிமுகம் - சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்.

உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் எங்கே வாழ்ந்தாலும், அது மேற்கத்திய நாடுகளாக அல்லது கீழைத்தேய நாடுகளாக இருக்கலாம். அவர்கள் அலங்கார உடை அணிந்தவராக, அல்லது நிர்வாணமாக மூக்கொழுகக் காட்சியளித்தாலும், அவர்களது அடிப்படைத் தேவைகள், உணர்வுகள் தாக்கங்கள் யாவும் ஒரே மாதிரியாகவே இருக்கும். சாதாரணமாக ஏழ்மை நிறைந்த வசதியற்ற குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் மட்டுமே பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுப் பாதிக்கப்படுகிறார்கள் என மேலெழுந்தவாரியாகப் பொதுவானதோர் அபிப்பிராயம் எங்கும் நிலவுகிறது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானதோர் கருத்து என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகவே இன்றைய நவீன யுகத்தில் அதிகமான சிறுவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி உடல் உள ரீதியாகப் பாதிக்கப்படுவதற்கு இவ்வாறான அலட்சியமான கருத்தியலே காரணமாக அமைகிறது எனலாம். எனவே இதுபற்றிய உண்மையான நிலையை விளக்கிச் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஓர் கட்டாயக் கடமையாக அமைகிறது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி எழுத வேண்டும், அதுவும் தமிழில் ஒரு சிறு கைநூலையாவது எழுதித் தயாரிக்க வேண்டும் என்று நெடுநாட்களாக எனக்கோர் ஆவல் இருந்தது. ஆனால் அதனைக் கட்டாயம் செய்தேயாக வேண்டும் எனும் உந்துதலை என்னுள் ஏற்படுத்த சில வருடங்களுக்கு முன் நீர்கொழும்பில் எனக்குக் கிடைத்த ஒரு சிறு அநுபவமே மூல காரணியாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது

சில வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன், அதிர்ஷ்டவசமாக எனக்கு நீர்கொழும்புக்குப் போகும்; சந்தர்ப்பம் கிடைத்தது. எங்கே போனாலும் ஒரு தேவாலயத்தைத் தரிசிப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தமையால் அங்கும் ஒரு தேவாலயத்தைத் தேடி உள்ளே சென்று அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளையில் என்னருகே ஆளரவம் கேட்கவே பக்கவாட்டில் நிமிர்ந்து பார்த்தேன். ஒரு அழகான சிறு பெண், வயது 8 அல்லது 9 இருக்கும்; புன்னகைத்த வண்ணம் என்னருகே வந்து அமர்ந்தாள். அவளது சிநேகபூர்வமான நடவடிக்கையால் கவரப்பட்ட நான் அவளிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். அந்த 8 வயதுச் சிறுமி தனது தாயார் வறுமை காரணமாகப் பாலியல் ரீதியான தொழில் செய்வதாகவும் அதற்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது தனது பொறுப்பென்றும் மிகவும் பெருமையோடு கூறினாள். மென்மேலும் அவள் கூறிய விபரங்கள் என்னைத் திகைப்பில் ஆழ்த்தின. இப்படியான சூழ்நிலையில் வாழும் அவளை யாரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் கூட அதனைச் சாதாரண நிகழ்வாக அலட்சியம் செய்துவிடும் அல்லது முடியுமானால் அந்நிலையை உபயோகித்து லாபம் சம்பாதிக்கும்; வல்லமையான மனோநிலையை அவளிடம் என்னால்; காணமுடிந்தது. நான் கண்டதும் சந்தித்ததும் ஒரேயொரு சிறுமியைத் தான் ஆனால் இவளைப் போல் எத்தனையாயிரம் சிறுவர் சிறுமியர் இன்னிலையில் வாழுகின்றனரோ தெரியாது. எனவே இச்சிறுமியின் மேற்படி நிலைக்குக் காரணம் என்ன, இதுபற்றியதோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் என்ன, என்று நான் சிந்திக்க முற்பட்டதின்; விளைவு தான் இச்சிறிய கைநூல்.

இக்கைநூலின்; நோக்கம் உங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் மனக்குழப்பத்தைப் புரிந்து கொள்ள உதவுவதும், சட்டபரிபாலன சேவைகளினூடாக இட்டுச் செல்லப்படும் போது ஏற்படும் பயம், குழப்பம், அச்சுறுத்தல் ஆகியவற்றிலிருந்து தெளிவுபெற உதவி செய்து வழி நடத்துவதுமேயாகும். இச்சட்ட பரிபாலன முறை, உடல்ஃஉளவளத் துறை ஆலோசனை வழங்கல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டதல்ல.

இக்கைநூல், பாலியல் வன்முறையினால் பாதிக்ப்பட்ட பிள்ளைகள் அவர்கள் குடும்பங்கள் ஆகியோருடன் நடாத்தப்பட்ட பல கலந்துரையாடல்கள் மூலம் திரட்டப்பட்ட விபரங்களால் உயிரூட்டப்பட்டுள்ளது. இத்தகவல்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால், அவை தங்களைப் போல் பாலியல் வன்முறையின் கொடுமைகளுக்குள்ளான இளைஞர், பிள்ளைகளுக்கு அதிலிருந்து விடுபட எவ்வளவு தூரம் உதவியாகவிருக்கும் என்பதையும் அதன் தேவையின் அவசியத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உணர்ந்து வற்புறுத்தியிருக்கிறார்கள்.

பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்;பட்டிருக்கும் வேதனையையும் குழப்பத்தையும் மற்றவர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அத்துடன் சாதாரணமாகப் பாலியல் துஷ்பிரயோகம் எவரையுமே ஒரு சமாளிக்க முடியாத ஆதரவற்றதோர் நிலைக்குத் தள்ளித் திணற வைக்கும் என்பது கண்கூடு. இக்கைநூலும் இதிற் தரப்பட்ட தகவல்களும் இச்சேவை முறையை இலகுவாகப் புரிந்து கொள்ள உதவுவதோடு பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட யுவதிகள் - இளைஞர்கள் தனிமையாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட உதவுகிறது.

பாலியல் துஷ்பிரயோகம் பாதிக்கப்பட்டவரை மட்டுமன்றி அவரது பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர், அனைவரையுமே பாதிக்கும். இக்கைநூலில் தரப்பட்டிருக்கும் சகல தகவல்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்;கு உட்படுத்தப்பட்ட ஒருவரின் கண்ணோட்டத்தில், பாதிக்கப்பட்ட அனைவருக்குமே உதவ வேண்டும் என்ற நோக்குடனேயே எழுதப்பட்டிருக்கிறது. படித்துப் பயன் பெறுங்கள். உங்களது அபிப்பிராயங்கள் வரவேற்கப்படும்.

திலகா சேவியர்

மேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்..

0 உரையாடல்: