Thursday, November 1, 2007

இளகிய இதயம்

தமிழில்: எம்.எச்.எம்.யாக்கூத் -முன்னை நாள் அதிகாரி, தேசிய கல்வி நிறுவகம்.-

பல வருடங்கட்கு முன்னர் சேவையாற்றிய ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஒருவரின் கதை இது. அவரது பெயர் திருமதி. தோம்சன். தனது பாடசாலையில் 5 ஆம் வகுப்புக்கு, வகுப்பாசிரியராகச் சென்ற முதல் நாளன்று அவர் ஒரு பெரும் பொய்யைச் சொன்னார். பெரும்பாலான ஆசிரிய, ஆசிரியைகள் வகுப்பு முன்னிலையில் நின்று தமது மாணவ மாணவியரை நோக்கிக் கூறுவதி போல அவரும் "நான் உங்கள் ஒவ்வொருவர் மீதும் சமமாக அன்பு செலுத்துகின்றேன்". என்று. என்றாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் அந்த வகுப்பில் முன்வரிசையில் ஒரு சிறுவன் கதிரையில் அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தான். அவனது பெயர் தியடோர் ஸ்ரொடார்ட். திருமதி தொம்ஸன் அவனைக் கடந்த வருடத்தில் இருந்தே அவதானித்து வருகின்றார். அழுக்கு படிந்த உடைகள்; அழுக்கு படிந்த உடல்; பரட்டை தலை; முன்னர் போன்று மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதும் கிடையாது.

திருமதி தொம்சன், தியடோரின் தவணைப்பரீட்சை விடைத்தாள்கட்குப் புள்ளியிடத் தொடங்கினார். தடித்த முனைச் சிவப்பு பேனையால் தொடந்தும் X அடையாளங்கள் பல இட்டார். முடிவில் ஒவ்வொரு விடைத்தாளின் மேற்பகுதியிலும் 'F' எழுத்துக்களை பெரிதாக இட்டார். தான் கற்பிக்கும் வகுப்பு மாணவ மாணவியரின் கடந்த காலக் குறிப்பேடுகளை மீளாய்வு செய்யும் கருமத்தில் திருமதி. தோம்சன் ஈடுபட்டார். குறிப்பேடுகளை ஒவ்வொன்றாகப் பரிசீலனை செய்தார். இடைநடுவே தியோடரின் குறிப்பேடு கண்ணில்பட்டது. அதனை ஒருபுறமாக ஒதுக்கி வைத்தார். மற்றைய மாணவர்களின் குறிப்பேடுகளைப் பரிசீலித்து முடித்த பின்னர் கடைசியாக தியடோரின் குறிப்பேட்டுக் கோவையைக் கையில் எடுத்தப் பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டத் தொடங்கினார். அவரது கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன.

"தியடோர் விவேகம் மிக்கவன்; அதி திறமைசாலி; அவனது முகத்தில் சிரிப்புக்குக் குறைவே இல்லை; வேலைகளைச் செவ்வனவே செய்து முடிக்கின்றான்; ஒழுக்க சீலனாக நடந்து கொள்கின்றான்; அவன் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை....." -இது அவனது, முதலாம் வகுப்பு ஆசிரியை எழுதி வைத்த குறிப்பு.-

"தியடோர், திறமைசாலி; சகபாடிகளுடன் இணக்கமாக நடந்து கொள்கின்றான்; அவனது தாயார் கடுமையாக சுகவீனமுற்றுள்ளார். அண்மைக்காலமாகச் சற்றுக் குழப்பமடைந்து காணப்படுகின்றான். வீட்டு வாழ்க்கை சற்றுச் சிக்கலானது போலத் தெரிகின்றது......." -இது அவனது இரண்டாம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-

"தாயின் பிரிவு இவனைப் பெரிதும் பாதித்துள்ளது. எனினும், வேலைகளில் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றான். தந்தை இவன் மீது அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் இவனது வீட்டு வாழ்க்கை இவனைப் பெரிதும் பாதித்துவிடக்கூடும்..." -இது அவனது மூன்றாம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-

"தியடோர், பிதங்கியுள்ளான். பாடசாலை தொடர்பாக அதிக அக்கறை காட்டுவதில்லை. இப்போது இவனுக்கு அதிக நண்பர்கள் கிடையாது. சில நேரங்களில் வகுப்பில் நித்திரை கொள்வதுமுண்டு...." இது அவனது நான்காம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-

தியடோரின் கடந்த கால வாழ்க்கைக் குறிப்புக்களை வாசித்த திருமதி தோம்சன் அவன் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை நிலைமையை நன்கு விளங்கிக் கொண்டார். அந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து உள்ளூர வெட்கப்பட்டார். வேதனைப்பட்டார்.

நத்தார் காலத்தில் திருமதி தொம்சனின் வகுப்பு மாணவ மாணவியர்கள் அவருக்கு பரிசசுப்பொதிகளை கொண்டு வந்து கொடுத்தனர். தியடோர் தவிர ஏனைய பிள்ளைகள் யாவரும் தமது பரிசுப்பொதிகளை அழகிய வண்ணத் தாள்களில் வண்ண நாடாக்களால் கட்டிக் கொண்டு வந்திருந்தனர். தியடோர் கொண்டு வந்த நத்தார் பரிசுப் பொதி கசங்கிய பழைய பிரவுண் பேப்பர் துண்டில் சுற்றப்பட்டிருந்தது. அப்பொது அவலட்சணமாகக் காணப்பட்டது. ஏனைய பரிசுப்பொதிகளோடு, தியடோரின் பரிசுப்பொதியையும் திருமதி தொம்சன் விரித்துப் பார்த்தார். பழைய உலோக வளையலொன்றும், வாசனைத் தைலப் போத்தலொன்றும் அதனுள் காணப்பட்டன. போலிக்கற்கள் பதிக்கப்பட்ட அவ்வளையலில் இடையிடையே சில கற்கள் மட்டுமே அடங்கியிருந்தது. இதனைக் கண்ட வகுப்பு மாணவ மாணவியர்கள் தியடோரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். சிரித்துக் கேலி செய்யத்தொடங்கினர். வகுப்பு மாணவரை அமைதிப்படுத்திய திருமதி தொம்சன் "இந்த வளையல் நல்ல அழகாக இருக்கிறது. எனக்கு நிரம்ப பிடித்துக் கொண்டது." எனக் கூறி தனது புறங்கையிலும் மேனியிலும் சிறிதளவு வாசனைத்தைலத்தை தடவிக்கொண்டார். வகுப்பு எங்கும் வாசனை பரவியது. அன்று பாடசாலை விட்ட பின்னர் மற்ற மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறும்வரை காத்திருந்த தியடோர், தனது ஆசிரியையை நெருங்கி, "திருமதி. தொம்சன், இன்று நீங்கள் எனது தாயைப்போன்றே வாசனையாக இருக்கின்றீர்கள்..." என்று கூறிவிட்டு வெளியேறினான். அவனது கண்கள் பனித்திருப்பதை திருமதி. தொம்சன் அவதானிக்க தவறவில்லை. அவன் வகுப்பை விட்டு வெளியேறிச் சென்ற பின்னர் திருமதி, தொம்சன் நீண்ட நேரம் வரை தனியே அமர்ந்து இருந்து கண்ணீர் வடித்தார்.

அன்று தொடக்கம் அவர், தனது மாணவர்களுக்கு, வாசிப்பும், எழுத்தும், கணிதமும் சொல்லிக் கொடுப்பதை கைவிட்டார். மாறாக அவர் தனது வகுப்பு பிள்ளைகளுக்கு கற்பிக்க தொடங்கினார். திருமதி. தொம்சன், தியடோர் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்தினார். அவனுடன் கருமமாற்றத் தொடங்கினார். தியடோர் படிப்படியாகப் புத்துணர்வு பெற்று வருவதை திருமதி.தொம்சன் அவதானித்தார். அவர் அவனை ஊக்குவித்த போதெல்லாம் அவன் சிறப்பான துலங்கலைக் காட்டினான். அவ்வருட இறுதியில் தியடோர் அவ்வகுப்பில் சிறந்த மாணவர்களுள் ஒருவனாக திகழ்ந்தான். தாம் "எல்லா பிள்ளைகள் மீதும் சமமாக அன்பு செலுத்துவதாக" வருட ஆரம்பத்தில் திருமதி தொம்சன் கூறியிருந்தார். ஆனால், இப்போது தியடோர் திருமதி தொம்சனின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக மாறியிருந்தான்.

ஒருவருடத்தின் பின்னர் திருமதி தொம்சனின் மேசை மீது ஒரு சிறிய கடிதம் காணப்பட்டது. அதில் அவன் பின்வரும் ஒரேயொரு வாக்கியத்தை மட்டும் எழுதியிருந்தான்.
"எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்"

ஆறு வருடங்களின் பின்னர், தியடோரின் இரண்டாவது கடிதம் திருமதி தொம்சனுக்கு கிடைத்தது. அதில் பின்வருமாறு அவன் எழுதியிருந்தான்.
"நான் இவ்வருடம் எனது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டேன். வகுப்பில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."

மேலும் நான்கு வருடங்களின் பின்னர், தியடோரின் மூன்றாவதுகடிதம் திருமதி தொம்சனுக்கு கிடைத்தது. அதில் அவன் பின்வருமாறு எழுதியிருந்தது.
"பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உயர்கல்வியை தொடர்கிறேன். விரைவில் சிறப்பு பட்டதாரியாக தேறவுள்ளேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."

மேலும் நான்கு வருடங்கள் கழிந்த பின்னர், தியடோரிடமிருந்து மற்றுமொரு கடிதம் திருமதி. தொம்சனுக்கு கிடைத்தது. அதில் பின்வருமாறு அவன் எழுதியிருந்தான்.
"இளமானி சிறப்பு பட்டம் பெற்ற பின்னர், தொடர்ந்தும் படிக்க முடிவு செய்தேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."
இப்படிக்கு,
கலாநிதி தியடோர் எஃப். ஸ்டொடார்ட்.

கதை இந்த மட்டில் முடிந்து விடவில்லை. சில மாதங்களின் பின்னர் மேலுமொரு கடிதம் திருமதி.தொம்சனுக்கு கிடைத்தது. அக்கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
"நான் ஒரு யுவதியை விரும்புகின்றேன் அவளை மணமுடிக்க தீர்மானித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் எனது தந்தை இறந்துவிட்டார். திருமண தினத்தன்று மணமகனின் தாய்க்கென ஒதுக்கப்படும் விசேட ஆசனத்தில் தாங்கள் வந்து அமர வேண்டுமென வேண்டுகின்றேன்."

அந்த அழைப்பை திருமதி. தொம்சன் பெருமனத்துடன் ஏற்றுக்கொண்டார். திருமண வைபவத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தார். எப்படி எனச் சிந்திக்கின்றீர்களா?

திருமண வைபவத்துக்குச் செல்லத் தயாரானார். இடையிடையே கல்விழுந்த அந்த உலோக வளையலை அணிந்து கொண்டார். திதடோரின் தாயார் பாவித்த அந்த வாசனைத் தைலத்தை மேனியில் தடவிக் கொண்டார். திருமண மண்டபத்துக்குச் சென்று மணமகனின் தாயாருக்காக ஒதுக்கப்பட்ட விசேட ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

திருமண மண்டபத்தில் திருமதி. தொம்சனும் தியடோரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது தியடோர் "நன்றி திருமதி. தொம்சன். என் மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கு மிக்க நன்றிகள்... என்னை மதித்து, எனக்கு கணிப்பு வழங்கி. என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்கு ஏற்படுத்த முடியும் என எனக்கு உணர்த்தியதற்கு நன்றி..." என திருமதி தொம்சனின் காதில் வாயை வைத்து மெதுவாகக் கூறினான். திருமதி தொம்சன், கண்களில் நீர் மல்க, "அப்படியல்ல, தியடோர், என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்குக் கற்பித்தவர் நீங்கள் தான். உங்களைச் சந்தித்த பின்னர் தான், "எப்படிக் கற்பிக்க வேண்டும்" என்பதை நான் கற்றுக் கொண்டேன்" எனப் பதில் கூறினார்.

நன்றி: அகவிழி

6 உரையாடல்:

Anonymous said...

Test

Anonymous said...

இது உண்மைச் சம்பவம்தானே?
மனதை நெகிழ வைப்பதாக உள்ளது.

அத்துடன் ஆசிரியர்கள் மாணவரின் கல்வியில் செலுத்தக்கூடிய தாக்கத்தையும் உணர்த்துகிறது. எல்லாத் தியோடர்களுக்கும் மிகச்சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பதில்லைதானே......

கதையை மொழிபெயர்த்தவர் ஆசிரியர் என மொழிபெயர்ப்பதைத் தவிர்த்து டீச்சர் என்கின்றமை உறுத்துகிறது. டீச்சர் என்பதே மொழிபெயர்ப்பாளருக்கு இயல்பானதாகத் தெரிந்திருக்கிறது போலும். அறிவு உருவாக்கத்தில் மொழிபெயர்ப்புக்கள் மிகுந்த தாக்கம் செலுத்தும் சூழலில் அது தொடர்பில் அதிக அக்கறை வேண்டப்படுகிறது. நன்றி.

Anonymous said...

நல்ல கதை.
x-group என்று பெயர்தான் ஏனோ?

said...

வணக்கம்.

மிக அருமையான பதிவு.


இதன் மூலமொழி எது?


இப்படைப்பை மூல மொழியில் படிக்க விரும்புகிறேன்.


இன்றையவுலகத்தில் பாடசாலைகளெல்லாம் மாணவர்களைச் சிதைத்துப் பொதியேற்றும் வண்டியாக மாற்றுகின்றன.இதனால,; சிறார்கள் சிறுவர் நிலையை இழந்து,மனமுடைந்து கற்றிலில் ஆர்வமில்லாதிருக்கிறார்கள்.இது குறித்துப் பல ஆய்வுகள் வந்தவண்ண முள்ளன.


கலாநிதி நித்தி முத்துக்கிருஷ்ணா இது குறித்துப் பெரிய அளவில் ஆபிரிக்காவில் ஆய்வுகள் செய்திருக்கிறார்.அதையும் கூகிளில் தேடியெடுத்துத் தமிழில் போடலாம்.

பதிவுக்கு நன்றி!


ஸ்ரீரங்கன்

Anonymous said...

மனதை உருக்கிய கதை.
நன்றி

said...

சிறீரங்கன்
மற்றும்
அனானிமஸ்-1
அனானிமஸ்-2
அனானிமஸ்-3
உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.

சிறீரங்கன்,
இக்கதையின் மூலமொழி எதுவென்று தெரியவில்லை.
இதை நன்றியுடனே மீள்பிரசுரம் செய்திருந்தோம்.
மூல மொழியை அறிய முயற்சிக்கின்றோம்...

கலாநிதி நித்தி முத்துகிருஸ்ணாவின் ஆய்வுகளைக் காலப்போக்கில் எமது தளத்தில் இட முயற்சிக்கின்றோம்.
சிறுவர் உளவியல் தொடர்பாக வேறு பல ஆய்வாளர்களின் படைப்புக்களையும் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
மற்றும்,
உங்களது தீவிரமான பங்களிப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். வெறும் பின்னூட்டம் என்ற அளவில் நின்றுவிடாமல் அதற்கப்பால் சிறுவர் உளவியல் தொடர்பான ஆழமான உரையாடல்கள் மூலம் இன்னுமொரு தளத்திற்கு சென்றுவிடமுடியுமென நினைக்கின்றோம். அவ்வகையில் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.

அனானிமஸ்-1,
உங்களது பார்வை முக்கியமானதே.
பொதுவாக இலங்கையில் பாடசாலைகளி ஆசிரியைகளை டீச்சர் என அழைக்கும் முறை காணப்படுகின்றமை மொழிபெயர்ப்பாளர் அவ்வார்த்தையை தெரிவு செய்யக் காரணமாக அமைந்துவிட்டிருக்கலாம். மற்றும் கதையை உணர்ச்சி பூர்வமான தளத்தில் நகரச்செய்வதற்கு அவ்வார்த்தை கூடுதலாக துணைபுரியும் என மொ-ர் நினைத்திருக்கலாம்.

மற்றும்,
இலக்கியம் என்கின்ற ரீதியில் இக்கதை தனக்கான பலவீனங்களுடனேயே நகர்கின்றது. அதன் பிரதான தளம் உணர்வுபூர்வமாயிருப்பதும், ஆசிரியை/பெண் மீதான புனிதப்படுத்தல்களுடன் நகர்வதையும் அதற்கான பலவீனமாக சொல்ல முடியும். ஆயினும், செய்தியை தொற்றச்செய்தல் என்ற அடிப்படையில் அதன் முக்கியத்துவம் மறுக்கப்பட முடியாதது.