Thursday, October 4, 2007

பெருந்தோட்ட தேசிய பாடசாலைகளும் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்களும்.

-மௌனி-

ஒரு நாட்டின் தேசிய குறிக்கோள்களையும், கலாசார விழுமியப் பண்புகளையும், சமூக மட்டத்தில் விருத்தியடையச் செய்வதில் பாடசாலைகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் தேசியப் பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள் என்று வேறுபடுத்திக் காணப்பட்டாலும் அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெறும் நிர்வாக முறைகள், ஆசிரியர்களின் கற்பித்தல் விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களும் ஒரு நாட்டின் தேசியத்தை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.

அதன் அடிப்படையில் எமது நாட்டில் காணப்படும் 9727 பாடசாலைகளுள், 324 தேசியப் பாடசாலைகளும், 84 நவோதயப் பாடசாலைகளும் காணப்படுவதாக மேற்கொள்ளப்படும் அறிக்கைகள் மூலம் அறியப்படுகின்றது. இருந்தும் எமது மலையக பெருந்தோட்ட சமூகத்தை பொறுத்தவரையில் தமிழ்மொழி மூலமான தேசியப்பாடசாலைகளின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. அதிலும் மத்திய மாகாணத்தை பொறுத்தவரையில் இரண்டே இரண்டு தமிழ்த்தேசியப்பாடசாலைகள் மட்டுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மத்திய மாகாண தேசியப்பாடசாலைகளைப் பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை தசாப்த காலங்களுக்கு மேலாகவே ஆசிரியர்- அதிபருக்கான இட மாற்றங்கள் வழங்கப்படாமலே இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு கல்விச் சமூகத்தை பொறுத்த வரையில் காலத்துக்கு ஏற்ற வகையில் கல்வியில், சிந்தனையில் செயற்பாடுகளில் நிர்வாக முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

அவ்வாறு ஏற்படுகின்ற மாற்றங்கள் வெறுமனே வாய் சொற்களாகவோ, எழுத்துவடிவ ஆவணங்களாகவோ மட்டும் இருந்து விடக்கூடாது. மாறாக செயல் வடிவம் பெறுதல் வேண்டும். இல்லாவிடின் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிப்பதில் எவ்விதப் பயன்களும் இல்லாமல் போய்விடும். தற்போது பாடசாலை மட்டங்களில் பெறப்பட்டு வருகின்ற தகவல்களின்படி பெருந்தோட்டப் பாடசாலைகலில் தேசிய பாடசாலைகள் உட்பட அனேகமாக பாடசாலைகலில் நீண்ட காலமாகவே ஆசிரியர் அதிபர்களுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் விடயம் தெட்டத்தெளிவாகிவிட்டது.

இவ்வாறு மிக நீண்ட காலமாகவே எமது பெருந்தோட்டப் பாடசாலைகளில் இட மாற்றங்கள் நடைபெறாமையும் எமது மலையக கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்திருக்கின்றது என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். அதிலும் மத்திய மாகாண தேசியப் பட்சாலைகளைப் பொறுத்த வரையில் இவ்வாறு இடமாற்றம் பெறுவது என்பது நூற்றுக்கு நூறுவீதம் நடைபெறாமலே உள்ளது. தற்போது புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும். ஒரு தேசியப் பாடசாலையில் மிக நீண்ட காலமாகவே இந்நிலைமை தொடர்கின்றது.

அண்மையில் இப்பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மிக நீண்ட காலமாகவே தான் நியமனம் பெற்ற நாள் முதல் தொடர்ந்தும் இதே பாடசாலையில் முப்பத்தைந்து வருட காலத்தை முடித்திருக்கின்றார். ஒருவகையில் தமது வியாபார நடவடிக்கைகளை கவனித்து கொள்வதற்கு வசதியாக, இவரது சேவைக்காலம் தொடரப்பட்டிருந்தாலும் அரசாங்க சேவையாளர் என்ற ரீதியில் இவர் இடமாற்றம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமான ஒரு விடயமாகும். இது போலவே இந்து தேசிய பாடசாலையில் இன்னும் பல ஆசிரியர்கள் (அதிபர் உட்பட) இந்நிலையில் காணப்படுவதை நாம் அறிய முடிகின்றது. அதன் அடிப்படையில் இப்பாடசாலை தகவலின்படி கல்லூரியின் அதிபர் நியமனம் பெற்ற நாள் முதல் 17 வருடங்களுக்கு மேல் இதே பாடசாலையில் இருப்பதுடன் 21 ஆசிரியர்களுக்கு மேல் தொடர்ந்தும் எட்டு வருடங்களைப் பூர்த்தி செய்தவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இடமற்றங்களை பெற்று கொள்ளாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம்.

1. இப்பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் அதிபர் உட்பட பலரும் இப்பாடசாலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் பாடசாலையின் அநேக வளங்களைத் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் நன்கு பயன்படுத்துக் கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது. இதன் காரணமாக இவர்களால் இப்பாடசாலையை விட்டு வேறு பாடசாலைகளுக்கு செல்வதில் எவ்வித இஸ்டமும் இல்லை. இருக்கும் காலம் வரையில் இப்பாடசாலையிலேயே எப்படியாவது தமது காலத்தை கடத்திவிட வேண்டும் என்ற ஒருவகை எண்ணப்பாடுகள் இவர்களிடம் காணப்படுகின்றது.

2. அடுத்து இப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வரும் அனேக ஆசிரியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டே இப்பாடசாலைக்கு நியமனத்தை கேட்டு பெற்று கொண்டு வருகின்றனர். இவ்வாறு வந்தவர்களில் சிரேஸ்ட ஆசிரியைகளில் ஒருவர் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகவே இப்பாடசாலையில் கடமை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனேகமாக இப்பாடசாலையில் தமது இருப்பை மட்டுமே கருத்திற் கொண்டு செயற்படுகின்றார்களேயொழிய முன்னைய காலங்களைப் போன்று தெளிவான ஒரு மலையக சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணப்பாடுடையவர்களாக காணப்படவில்லையென்றே கூற வேண்டும்.

3. இவைகளைத் தவிர இன்னொரு பிரதான காரணம் தேசியப்பாடசாலை ஆசிரியர்கள் வேறு தேசியப்பாடசாலைகளுக்கு மட்டும் தான் நியமன இடமாற்றம் பெறமுடியும் என்ற நிலைப்பாடு. இவ்வாறான நிலைப்பாடுகள் காணப்படுவதால் பெருந்தோட்ட தேசியப்பாடசாலை ஆசிரியர்கள் மாகணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறக்கூடிய வசதிகள் இல்லை. தேசியப்பாடசாலைகளுக்கு மட்டுமே இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்றாலும் மத்திய மாகாண தேசிய பாடசலையில் உள்ளவர்கள் வேறு மாகணங்களுக்கே இடமாற்றம் பெற்று செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாகவும் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இடமாற்றங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் பெற்றுக்கொள்ள முடியாத சிக்கல் நிலை காணப்படுகின்றது. அதனால் விரும்பியோ விரும்பாமலோ நியமனம் பெற்ற பாடசாலையிலேயே தங்கிவிட வேண்டி ஏற்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு காரணங்களைக்காட்டி ஆசிரியர் அதிபர்களுக்கான இடமாற்றங்கள் நிராகரிக்கப்படும் போது கல்விச்சமூகத்தில் பல்வேறுபட்ட முறைகேடுகள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது. இது தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும். அதாவது ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாதவிடத்து, ஆசிரியர்களின் கற்றல்- கற்பித்தல் விடயங்களில் சலிப்புத்தன்மை தோன்றிவிடுவதுடன் ஆசிரியரின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்பட்டு விடலாம். அதே நேரத்தில் ஆசிரியர்களின் நடத்தைக் கோலங்களிலும் சமூக சிந்தனை மாற்றங்களிலும் முன்னேற்றம் இல்லாதவர்களாக காண்ப்படுவதுடன் ஒரேவிதமான கற்பித்தல் விடயங்களையும் மேற்கொள்பவர்களாக காணப்படுவர்.

இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் விடயங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கும் கல்வியில் அலுப்பு நிலை தோன்றி விடலாம். எனவே ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் ஒரே பாடசாலையில் தனது காலத்தினை கடத்தல் வேண்டும் என்ற எண்ணப்பாட்டை விட்டு வேறு வேறு பாடசாலைகளுக்கும் இடமாற்றத்தை பெற்றுச் சென்று தமது பணியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது தமக்கான் பல்வேறு அனுபவங்களையும் ஆளுமை ரீதியான முன்னேற்றங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பாடசாலை அதிபர்களை பொறுத்தவரையில் இவர்களுடைய இடமாற்றங்கள் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. ஒரு அதிபர் என்பவர் ஒரு பாடசாலையில் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தைச் சார்ந்த அனைவரினதும் தலையெழுத்தையே மாற்றி விடக்கூடிய சக்தி படைத்தவர். அவ்வாறான சக்தி படைத்த ஒரு அதிபர் ஒரே இடத்தில் ஒரே பாடசாலையில் தொடர்ந்தும் ஐந்து வருடம் அல்லது எட்டு வருடங்களுக்கு மேல் இருப்பதற்கு விருப்பம் கொள்வார் எனில், அவர் அதிபர் என்ற தமது தகுதியை இழந்து விட்டார் என்றே கூறல் வேண்டும்.

இவ்வாறு இன்று அதிபர் என்ற தமது தகுதியை இழந்துவிட்ட நிலையில் இன்று பெருந்தோட்ட தேசிய பாடசாலைகள் உட்பட அனேக பாடசாலைகளில் அனேக அதிபர்கள் பாடசாலை விடுதிகளை தமக்கு சொந்த வீடுகளாக மாற்றிக்கொண்டு பாடசாலையில் உள்ள வளங்களையும் தமது சொந்தத் தேவைகளுக்கு பயன் படுத்திக்கொண்டிருப்பதுடன் ஒரு பாரிய கல்வி சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருப்பதை நாம் கண்கணூடாகக் காணக்கூடியதாக உள்ளது.

எனவே எமது மலைநாட்டில் காணப்படும் கல்வி நிறுவனங்கள் "புதிய சிந்தனை" ஊடாக கல்விப் பாதையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் எனில், கல்வி அமைச்சு, கல்வி நிர்வாக அமைச்சு, மத்திய மாகாண கல்வி அமைச்சர் மற்றும் அதிபர்-ஆசிரியர் இடமாற்ற விடயங்களோடு தொடர்புடையவர்கள் அனைவரும் மத்திய மாகாண பாடசாலைகள் தொடர்பில் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும். இவற்றுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் மேற்கொள்ளல் வேண்டும்.

அதாவது பாடசாலை மட்டத்தில் தற்போது பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு எட்டு வருடத்துக்கு மேல் தொடர்ந்து ஒரே பாடசாலையில் இருக்கும் அதிபர் ஆசிரியர்களை எவ்வித தயவும் காட்டாமல் இடமாற்றம் செய்தல் வேண்டும். இதில் தேசிய பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளை காட்டக் கூடாது. ஏனெனில், தற்போது பெருந்தோட்டத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளில் ஐந்து வருடத்துக்கு மேல் வேலை செய்கின்ற அனைத்து அதிபர், ஆசிரியர்களும் கடந்த காலங்களில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் கீழ் நியமனம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக்கடிதங்களும் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அனேக ஆசிரியர்கள் இன்னும் கூட தமது ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளாத நிலையில் தமது காலத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரம் மத்திய மாகாணத்தின் மாகாண அமைச்சின் கீழ் இயங்கிய பாடசாலைகளே தற்போது பெயர்மாற்றங்களுடன் தேசிய பாடசாலையாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. (உதாரணமாக புஸ்ஸல்லாவை சி.சி. தமிழ் வித்தியாலம் தற்போது இந்து தேசிய கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டடுள்ளது).

எனவே பெருந்தோட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் தேசியப் பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக தேசியப்பாடசாலைகளுக்கும் நவோதய பாடசாலைகளுக்கும் இடையிலாவது ஒரு இணைப்பை ஏற்படுத்தல் வேண்டும். இதன் மூலம் நவோதய பாடசாலை அதிபர், ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும், தேசியா பாடசாலை அதிபர், ஆசிரியர்களை நவோதயப் பாடசலைகளுக்கும் இடமாற்றங்களை செய்தல் முடியும். இதனை கட்டாயம் நடைமுறைக்கு கொண்டுவரல் வேண்டும். அவ்வாறு கொண்டுவரும் போது குறிப்பிட்ட தேசியப் பாடசாலைகளில் தொடரும் நிர்வாக முறையீடுகளையும் அதிபர், ஆசிரியர்களிடம் காணப்படும் அலட்சியப் போக்குகளையும் இல்லாமல் செய்வதுடன் மாணவர்களின் கல்வி ரீதியான முன்னேற்ற நடவடிக்கைகளிலும் அர்த்த பூர்வமான முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும்.

அதுமட்டுமன்றி மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சின் கண்காணிப்புகள் மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும். தேசியப் பாடசாலைகள் என்பதால் அதனை தமது மேற்பார்வையில் இருந்து கை நழுவ விட்டு விடக்கூடாது. ஏனெனில் குறித்த தேசியப் பாடசாலைகள் பெருந்தோட்ட பிள்ளைகைளின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அண்மைக் காலமாக இந்த தேசிய பாடசாலையின் நடவடிக்கைகள் தோட்டப்புற மாண்வர்களை புறக்கணிப்பதாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதாவது தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரையில் மாணவர்களுக்கான அனுமதிகள் பெறப்பட வேண்டும் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் ஏதாவது உத்தியோகம் செய்பவர்களாக அல்லது நகரவர்த்தகர்களாக இருக்க வேண்டும். அல்லது பெற்றோர்கள் பாடசாலையின் பழைய மாணவர்களாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகின்றது. இந்நிலை தொடரப்படும் எனில் இன்னும் இரண்டு மூன்று வருடங்களின் பின் எமது தோட்டப்புற மாணவர்கள் தேசியப் பாடசாலைகளை எட்டிக் கூட பார்க்க முடியாத நிலை தோன்றிவிடும். அதற்கப்புறம் எதற்குத்தான் பெருந்தோட்டத்தில் இப்படி ஒரு தேசியப் பாடசாலைகள். எனவே கல்வி அமைச்சு இது தொடர்பிலும் கூடிய கவணம் செலுத்த வேண்டும்.

அத்துடன் பெருதோட்டத்தைப் பொறுத்தவரையில் இப்போதுதான் சிறிது சிறிதாக கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இந்நிலையில் கல்வி அமைச்சின் மூலம் வழங்கப்படுகின்ற வளப்பகிர்வுகளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நிதி உதவிகளும் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் காட்டாமல் வழங்கப்பட வேண்டும்.

தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படுவது போலவே மாகாணப் பாடசாலைகளுக்கும் அனைத்து வளப்பகிர்வுகளிலும் சமத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட தேசிய பாடசாலைகளுக்கு கிடைக்கின்ற உதவிகளும் பணவசதிகளும் புத்தக விநியோகங்களும் மாகாணப்பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதே நேரம் மாகாணப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் உதவிகளும் தேசியப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றம் ஏற்படுவதுடன் மாகாண ரீதியில் பாடசாலைகள் சமத்துவத்துடன் வழி நடத்தப்படுதல் வேண்டும்.

இதே நேரத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள கல்வி ஆலோசகர்கள் தொடர்பிலும் சில விடயங்களை குறிப்பிடல் வேண்டும். அதாவது பாடசாலை மட்டங்களில் மேற்பார்வைகளை மேற்கொள்ளும்போது, ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை மேற்கொள்ளும்போதும், தேசியப் பாடசாலை மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளை காட்டும் வகையில் அர்த்தமற்ற தரக் குறைவான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்வதுடன் பாடசாலைகளுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் செயற்படல் வேண்டும். குறிப்பாக சில வலயக் கல்வி ஆலோசகர்களிடம் இவ்வறான குறைபாடுகள் பல கணப்படுகின்றமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. "ஆசிரிய ஆலோசகர் என்பவர் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் விடயங்களில் ஆலோசனை கூற வேண்டுமே ஒழிய ஆசிரியர்களின் குறைபாடுகளையோ, பாடசாலைகளின் குறைபாடுகளையோ விமர்சனம் செய்வதாக இருக்கக்கூடாது. அப்படி விமர்சனம் செய்வதாக இருந்தால் அவ்விமர்சனம் ஆசிரியரின் உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடாமல் அவருடைய முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவதாகவே அமைதல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதும் வேண்டும்.

எனவே இது போன்ற விடயங்கள் கருத்திற் கொண்டு எதிர்கால மலையக சமூகத்தில் நிரந்தரமான கல்வி விடியலுக்கு ஏற்ற வகையில் சிறந்த நடவடிக்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதுடன் மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலை ஆசிரியர், அதிபர்களுக்கான இடமாற்றங்களையும் எமது மாகாண கல்வி அமைச்சின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் சட்ட ரீதியான நடைமுறைகளை கொண்டு வருதல் வேண்டும்.

அதேநேரம் ஆசிரியர் இடமாற்றங்களை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் அவர்களுடைய விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவதுடன் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கே அவர்கள் இடமாற்றம் செய்யப்படல் வேண்டும். இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆங்காங்கே பாடசாலைகளுக்குள் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மறைமுகமான குளறுபடிகளை களையச் செய்வதுடன் யதார்த்தபூர்வமான தெளிவான ஒரு மலையக கல்விச் சமூகத்தைக் கட்டி எழுப்ப முடியும் என்பது சத்தியமே.

நன்றி: வீரகேசரி
sep 30- 2007

1 உரையாடல்:

said...

இக்கட்டுரை தொடர்பில் வீரகேசரியில் பிரசுரமான எதிர்வினை வருமாறு:

வீரகேசரி வார வெளியீட்டில் 30.09.2007 அன்று வெளியான "கதிர்" சஞ்சிகையின் 5 ஆம் பக்கத்தில் "மெளனி" என்ற புனை பெயரில் எழுதப்பட்ட "தேசிய பாடசாலைகளும் அதிபர் ஆசிரியர் இடமாற்றங்களும் என்ற தலைப்பிலான கட்டுரை தொடர்பாக புஸ்ஸல்லாவை இந்துதேசிய கல்லூரி அதிபர் பி.இராமலிங்கம் அனுப்பி வைத்துள்ள விளக்கக் கடிதம் பின்வருமாறு.

30.09.2007 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் "தேசிய பாடசாலைகளும் அதிபர் ஆசிரியர் இடமாற்றங்களும்" என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையை அனுப்பியவர்,மத்திய மாகாணத்தில் எத்தனை தேசிய பாடசாலைகள் உள்ளன என்பது பற்றித் தெளிவாக அறியாது குறிப்பிட்ட இந்து தேசியகல்லூரி மீது ஏதோ காழ்ப்புணர்ச்சி கொண்டவர் போல அக் கல்லூரியின் அதிபர்,ஆசிரியர், இடமாற்றங்கள்மீது அதீத ஆர்வம் கொண்டவராக காணப்படுகின்றார். மத்திய மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட தேசிய பாடசலைகள் உள்ளன.இப் பாடசாலைகள் நேரடியாக மத்திய கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கி வருகின்றன.இப் பாடசாலைகளுக்கான அதிபர் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விச் சேவையின் ஆளணிக் குழுவின் ஊடகவே மேற்கொள்ளப்படுகின்றன.குறிப்பிட்ட இது தேசிய கல்லூரியில் பல ஆசிரியர்கள் அண்மைக் காலத்தில் (2000-2007)கடந்த 7 வருடங்களில் இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளனர்.அண்மையஆண்டுகளில் 25 ஆசிரியர்களுக்கு மேல் இடமாற்றம் பெற்றுள்ளனர்.மேலும் ஆசிரியர் இடமாற்றம் என்பது ஏனைய நிறுவனங்களைப் போலன்றி குறிப்பிட்ட துறை சார்ந்த ஆசிரியர் ஒருவருக்குப் பதிலாக அதே துறை சார்ந்த ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்திலேயே மேற்கள்ளப்பட முடியும்அவ்வாறன்றி இடமாற்றங்கள் மேற் கொள்ளப்பாடுமாயின் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் பின்னடைவினை எதிர்நோக்கும் என்பதை உணர்ந்தே அதற்கேற்ற வகையில் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டபடி வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் பாதுகாப்பு காரணத்தினை முன்னிட்டேஇங்கு இடமாற்றம் பெற்று வருகின்றனர் என்பது நீண்ட காலமாக தமது சொந்த இடங்களை விட்டு இங்கு வந்துவதிவிடமின்றி எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றி வருகின்ற அவர்களது சேவையை இழிவு படுத்துவது போலகும்.மேலும் தேசிய பாடசலைகளுக்கு நியமிக்கப்படுகின்ற ஆசிரியர்கள் கல்விக்கல்லூரிகளிலும் பயிற்சிக் கல்லூரியிலும் திறமை சித்தி பெற்றவர்கள் மட்டுமே கல்வி அமைச்சின்நியமனத்துக்கமைய வருகின்றார்களேயன்றி தமது சுய விருப்பத்துக்கமைய வருபவர்ளும் இல்லை.மேலும் குறிப்பிட்ட கட்டுரை ஆசிரியர் அண்மைகாலங்களில் இப் பாடசலை கல்விப் பெறு பெறுகளிலும்இணைப்பாடவிதானச் செயற்படுகளிலும் அடைந்து வருகின்ற முன்னேற்றங்கள் பற்றி அக்கறை உடையவராக இல்லை.அவ்வாறில்லையெனில் பாடசாலையின் ஒரு பக்கத்தினை மட்டுமே குறிப்பிட்ட அவர் இப்படசாலையின் முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டிருப்பாரெனின் பாடசாலை மீதும் கல்விச் சமுதாயத்தின் மீதும் அவருக்குள்ள அக்கறைக்கு அது சான்றாக அமைந்திருக்கும்.

இப்பாடசாலை தரம் 5 புலமைப்பரிசிற் பரீட்சையிலும், க.பொ.த. சாதாரண பரீட்சையிலும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையிலும் மிகச்சிறந்தபெறுபேறுகளை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. வருடா வருடம் 15-20 மாணவர்கள் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில்சித்தியடைகின்றனர். 2 மாணவர்கள் மாவட்டத்திலே முதன் நிலையில் ச்த்தியடைந்து ஜப்பான் சென்று வந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டிலும்15 மாணவர்கள் சித்தியடைந்திருப்ப்தோடு ஒரு மாணவி 180 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அது மட்டுமன்றி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் இப்பாடசாலை மிகச்சிறந்த பெறுபேறுகளை பெற்றுவருகின்றது.பெரும்பாலான மாணவர்கள் க.பொ.த. சாதாரண பரீட்சையில் சித்தியெய்தி உயர்தரத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.உயர்தரப் பரீட்சையிலும் இப்பாடசாலை அண்மைகாலமாக மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வருடாந்தம் இப்பாடசாலை மாணவர்கள் பலகலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இப்படசாலை மாணவர்கள் சட்டக்கல்லூரிகளிலும், முகாமைத்துவ வணிக பீடங்களிலும், கலைப்பீடங்களிலும் கல்வி நெறியினைத்தொடர்ந்து வருகின்றனர். கடந்த வருடத்திலும் 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இந்திய பல்கலைக்கழகங்களிலும்எமது மாணவர்கள் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருகின்றனர். கல்வித்துறையில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும் ஏனைய தமிழ்த்தின விழா, ஆங்கில தின விழாக்களிலும் வலய, மாகாணா மட்டங்களில் மட்டுமன்றி தேசிய மட்டத்திலும் சாதனைகள் ஈட்டி வருகின்ற ஒரு பாடசாலையின் பின்னணியினை அறிந்திராது இப்பாடசாலையின் முன்னேற்றத்தினைப் பொறுக்க முடியாத ஒருவரின் ஆற்றாமையின் வெளிப்பாடேஅக்கட்டுரையாகும். மேலும் இந்து தேசிய கல்லூரி பெரும்பான்மையாக பெருந்தோட்ட மாணவர்களை உள்ளடக்கிய ஒரு பாடசாலையாகும்.இக்கல்லூரியின் மொத்த மாணவர்களின் 98% இற்கும் மேலான மாணவர்கள் பெருந்தோட்ட மாணவர்களாவர்.அது மட்டுமன்றி இது ஓர் தேசிய பாடசாலையாக இருப்பதனால் தரம்-1 இற்கு மாஅணவர்களைச் சேர்க்கும் போது கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைவாகவே விகிதாசார அடிப்படையிலேயே தெரிவு இடம்பெறுகின்றது. இத்தகைய அடிப்படை விடயங்களைகூட அறிந்திராது தனது சொந்த நலனுக்காக சமூகத்தில் ஆலமரமென வேரூன்றி நிழல் அளிக்கின்ற இப்பாடசாலையினை இழிவுபடுத்தும் ஒருவர் எவ்வாறு ஒரு சமூகப் பிரக்ஞை உள்ளவராக அமைதல் கூடும்.மேலும் கல்வி அமைச்சின் நியமனங்களுக்கமைய தேசிய பாடசாலைக்கு ஒருவர் இடமாற்றம் பெறவேண்டுமாயின்1989.31.01 க்கு முன்னர் அவர் நியமனம் பெற்றவராக இருத்தல் வேண்டுமென்பது நியமாகும்.1990.01.01 பின்னர் நியமனம் பெற்றவர்கள் தேசிய பாடசாலை பாடசாலை ஒன்றிற்கு இடமாற்றம் பெற முடியாது.

ஆகவே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொடர்பாடல் ஊடகமாக விளங்குகின்ற பத்திரிகைக்கு யாதாயினும் ஒரு கட்டுரையினை எழுதப் புகும் ஒருவர் அவ்விடயம்பற்றி முதலில் தெளிவாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். மேலும் உண்மையான விடயங்களை மட்டுமேபத்திரிகைகளில் பிரசுரித்தல் வேண்டும். உண்மைக்கு புறம்பாக திரித்து கூறப்படும் விடயங்கள் பத்திரிகைத்தர்மத்தினையேசிதைத்துவிடும். சம்பந்தபட்டவர்கள் இனியாவது சிந்தித்துச் செயற்படட்டும்.