Tuesday, October 2, 2007

சிறுவர்களின் உரிமைகளைப் பேணுவோம்

-த.மனோகரன்-

சிறுவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வொராண்டும் அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினமாக உலகளாவிய அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் அறிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், விழாக்கள் என்பன நடத்தப்படுவதுடன் பல்வேறு தரப்பினராலும் சிறுவர் உரிமையைப் பேணுவதாக சபதங்கள் எடுக்கப்படுவது வழமையான நிகழ்வாயுள்ளன.

1924 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் சிறுவர் உரிமை பற்றிய கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையால் விரிவாகவும் தெளிவாகவும் சிறுவருக்குரிய உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனம் 1924 ஆம் ஆண்டின் பிரகடனத்தை விட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. இந்நிலையிலே, 1979 ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு பரந்த அளவில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 1989 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமை தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. 1992 ஆம் ஆண்டு மேற்படி உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை இலங்கையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிசெய்து ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, சர்வதேச சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையிலுள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கும் உரிமை சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. பதின் நான்கு வயது வரையான பிள்ளைகள் சிறுவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். இனம், மொழி, சமயம், பால் என்ற எந்தவொரு வேறுபாடின்றி குறிக்கப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும் உரிமை 14 வயது வரையான ஒவ்வொரு சிறுவர், சிறுமியருக்கும் உள்ளன. நடைமுறையில், இவ் விதிமுறைகள் பேணப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்யும்போது கவலைதரும் விடயங்கள் பல வெளிச்சத்திற்கு வந்து வேதனைப் படுத்துவதுடன் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட சட்ட விதிகளும் ஏட்டளவில் மட்டுமே பேணப்படும் அவலம் புரிகின்றது.

சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை பின்வருமாறு அமைகின்றது.

* வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை
*பிறப்பின்போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை
*பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை
*பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை
*கருத்தை வெளிப்படுத்தும் உரிமை
*சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் சமய மொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை
*சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை
*போதிய கல்வியைப் பெறும் உரிமை
*பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை
*பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை
*சித்திரவதை குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை
* சாதாராண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை
*சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை

இவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைமுறையில் உலக நாடுகளிலா கட்டும் அல்லது நமது நாட்டிலாகட்டும் இவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் கல்விக் கொள்கையாக சிறுவர்கள் என்ற பதின்நான்கு வயதுக்குட்பட்ட சகலருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டுமென்று உள்ளது. அதேபோன்று அவ் வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கமர்த்துவதும் குற்றமென்று சட்டவிதி கூறுகின்றது. அறிக்கைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சிறுவர் உரிமை தினத்திலே இலங்கையில் சகல சிறுவர்களும் தமக்குரிய அடிப்படை உரிமைகளை, இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனரா அதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தனிநபர் காட்டு மிராண்டித் தனங்களும் நிறுவன ரீதியான பயங்கரவாத செயற்பாடுகளும் இலங்கைச் சிறுவர்களின் உரிமைகளுக்குப் பாதகம் செய்கின்றன. இன, மத, மொழி ரீதியான பாகுபாடுகளும் மனிதப் பண்பை இழந்த சிந்தனை ஒழுக்கம் இழந்தவர்களாலும் பெரும் பாதிப்பை நம் நாட்டுச் சிறுவர்கள் அடைகின்றனர். உயிர்குடிக்கும் குண்டுகள், வெடி களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழும் சிறுவர்களையும் நிம்மதியாக சொந்த வீடுகளில் பெற்றோர்களுடன் வாழ முடியாது அகதிகளாக அநாதைகளாக அல்லற்படும் சிறுவர்களையும் பசிக்கு உணவின்றி பரிதவிக்கும் சிறுவர்களையும் கல்வி பெறமுடியாத நிலையில் கைவிடப்பட்ட சிறுவர்களையும் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகும் சிறுவர்களையும், சுதந்திரமாக நடமாடக்கூட முடியாது கட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களையும் இது போன்ற பல்வேறு உரிமை மீறல்களுக்கு உட்பட்டு வேதனையுடன் வாழும் சிறுவர்களையும் கொண்ட நம் நாட்டிலும் சிறுவர் உரிமை தினம் சிறப்பாகக் கொண்டாடுவது வேடிக்கையானது என்பதை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

இந்த நாட்டில் சிறுவர்கள் அதாவது எதிர்கால சந்ததியினர், பகை, வெறுப்பு, குரோதம், போன்ற தீய உணர்வுகளைப் புகட்டி இன, மத, மொழி முரண்பாடுகளை ஊட்டி வளர்க்கப்படும் அவலம், கொடுமை நிலவுகின்றது. இவ்வாறான நிலையில் வளர்ந்து வரும் நாளைய சந்ததியின் செயற்பாடுகள் எவ்வகையிலும் மேம்பட்டதாயிருக்க முடியாது.

உண்மையைக் கூறுவதனால் நாட்டைக் குட்டிச் சுவராக்கி,நாசமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இன்றைய வளர்ந்த, வயோதிப சமூகம் வளர்ந்து வரும் இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவதாயில்லை. நாளைய சமுதாயத்தின், நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்கள் நடைமுறையில் நிலவிவரும் தீய செயற்பாடுகளைத் தகர்த்து புதியதோர் சிந்தனையுடன் புதிய வழி,நல்ல வழிகாட்டுவதே சிறுவர்களின் உரிமைகளைப் பேணும் வழியாகும்.

நன்றி: தினக்குரல்
(oct 01-2007)

0 உரையாடல்: