Thursday, January 13, 2005
செஞ்சோலை - சில அனுபவங்கள்
-டிசே தமிழன்-
நண்பர்கள் பலர் அக்கறையுடன், ட்சூனாமியால் பாதிப்புற்ற குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து தீவிரமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் சில உருப்படியான தீர்வுகளையடைந்து, நிர்க்கதியாகியுள்ள குழந்தைகளுக்கு ஏதோ ஒருவகையில் உதவக்கூடலாம் என்ற நம்பிக்கை தெரிகிறது.
.......
சென்ற ஆண்டு நடுப்பகுதியளவில், பன்னிரண்டு மாணவர்களாய் வன்னி சென்றிருந்தோம். எங்களால் இயன்றளவு கணணி, ஆங்கிலம் போன்றவற்றை அறிய வாய்ப்புக்கள் குறைந்தவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதே எங்களின் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அவ்வாறே தாயக-புலம்பெயர் உறவாடலையும் வளர்தெடுக்கலாம் என்றும் நினைத்திருந்தோம். ஒவ்வொரு சிறு குழுக்களாக ஒவ்வொரு இடங்களைத் தெரிவு செய்து சென்றோம். நானும், இன்னும் மூன்று தோழிகளும் பெற்றோரை இழந்த பெண்பிள்ளைகளை பராமரிக்கும் செஞ்சோலைக்கு சென்றோம். அது கிளிநொச்சியில் கனகாம்பிகை அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்திருந்தது (இப்போது புதிதாய் கட்டிய இடத்திற்கு மாறியிருக்கக்கூடும்). ஒரு ஆணாய் நான் மட்டும் தனித்திருந்தால் ஆரம்பத்தில் பழகுவதற்கு சற்றுத் தயக்கமாயிருந்தது. பிறகு அங்கேயிருந்த சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்களினது அன்பு, நின்றிருந்த நாட்களில் அவர்களில் ஒருவராய் என்னையும் உணரச்செய்திருந்தது. அந்தச்சிறு பிள்ளைகள் காட்டிய அன்பு எழுத்தில் வர்ணிக்கமுடியாதது; இப்போது நினைத்தாலும் நெகிழும் மனதை அவர்களது நினைவுகள் தரும்.
......
நாங்கள் நின்றபோது சிறுவயதுக்குழந்தையாக நாலைந்து மாதங்களில் ஒரு குழந்தையிலிருந்து கிட்டத்தட்ட 25 வயதிற்கு கிட்டவான பெற்றோரில்லாத 80 பேர்வரை அங்கே இருந்தனர். இன்னொரு பகுதியானவர்கள் வல்லிபுரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதைவிட தனியாக ஆண்களுக்கு வேறிடங்கள் இருந்தன. சின்னப்பிள்ளைகள் எல்லாம் யார் வந்தாலும் மிக விரைவில் சிநேகிதமாகிவிடுவார்கள். ஒரு பிளாஸ்டிக் கதிரையை செஞ்சோலையிலுள்ள மாமரத்தடியில் போட்டு உட்கார்ந்தால் நாள் முழுக்க கதைகள், விடுகதைகள் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். அவர்களின் பல கதைகள் முடிவேயில்லாது (சொந்தக்கதைகள் அல்ல) விக்கிரமாதித்தன் கதைகள் போல நீண்டபடியே இருக்கும். அதிலும் யார் கதை சொல்வது என்ற குழப்பத்தை தீர்ப்பதே எனக்கு ஒரு கதையாகிவிடும். ஆனால் ஆச்சர்யமாயிருந்தது, சின்னப்பிள்ளைகளின் கதைகளில்கூட இரத்தமும் மரணமும் சர்வசாதாரணமாய் பரவிக்கிடந்ததுதான்.
......
நாங்கள் அங்கே தங்கி நின்ற காலத்தில்தான் செஞ்சோலை பற்றிய ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள் (இது குறித்து தனிய ஒரு பதிவு எழுத ஆவல்). எனக்கும் இதில் ஆர்வமும், எடுத்த நண்பர் ஈழத்தில் முக்கிய இலக்கிய ஆளுமை என்பதாலும் அவர்களின் பின்னால் நானும் அலைந்தபடியிருந்தேன். எல்லாம் இயல்பாய் வரவேண்டும் என்பதற்காய் அந்த நண்பரும் அவர் குழுவினரும் எடுத்துக்கொண்ட் பொறுமையிலிருந்து நான கனக்க கற்றுக்கொண்டேன். அந்த ஆவணப்படத்தில் முக்கியமாய், ஓரளவு தங்களது நிலையறிந்த பெண்களிடம் அவர்களது கதையைக்கேட்பதாய் இருந்தது (அனைத்தும் ஆவணப்படத்தில் வராது என்று நினைக்கிறேன்). கிட்டத்தட்ட O/L எடுத்துக்கொண்டிருந்த, எடுத்துமுடிந்த பெண்களிடமே அவர்களது கடந்தகால வாழ்க்கை, எதிர்காலம் பற்றி தயக்கமில்லாது பேசும்படி சொல்லி பதிவுசெய்யப்பட்டது. கேட்ட கதைகள் எல்லாம் கவலையும் கொடுமையும் நிறைந்தவை. அவற்றையெல்லாம் பதிவு செய்தலும் நல்லதல்ல. ஆனால் ஒரு விடயம்தான் என்னை யோசிக்கவைத்தது. ஒரு வருடத்திற்கு முன்னர்வரை செஞ்சோலையிலிருக்கும் பிள்ளைகளுக்கான படிப்பு முழுவதும் செஞ்சோலை வளாகத்திலேயே கற்பிக்கப்பட்டது. கடந்த ஒருவருடமாகத்தான் அவர்கள் மற்றப்பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கவிடப்படுகின்றனர். இரண்டு மூன்று கல்லூரிகளில் இந்தப்பெண்கள் படித்துக்கொண்டிருக்கின்றனர். காலையிலும், மாலையிலும் பஸ் வந்து ஏற்றி இறக்கிக்கொள்ளும். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால், வெளியில் சென்று படித்துக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு அப்படிப்போய் படிப்பது பிடிக்கவில்லை. அதிகமானோர் பேசும்போது தங்களுக்கு உள்ளுக்கு இருந்து படிப்பதே விருப்பமானது என்று கூறினார்கள். இதே மாதிரி ஒரு கேள்வியை இங்கிருக்கும் தோழியிடமும் கேட்டது நினைவில் வந்தது. ஏன் பல்கலைக்கழகத்திற்காய் தொலைவு சென்று படிக்கவில்லை என்று வினாவியபோது, தெரிந்த சூழல், பெற்றோர் என்று பாதுகாப்பான சூழலைத்தான் பெண்கள் மனம் விரும்பும், ஆண்களைப்போலல்ல என்று கூறியிருந்தார். அப்படியான பாதுகாப்பு, இயல்பான சூழ்நிலைத்தான் மனதில் வைத்து செஞ்சோலைப்பிள்ளைகளும் கூறியிருக்கலாம்.
..........
செஞ்சோலையில் சின்னக்குழந்தையிற்கு பல்லுக்கொளுக்கட்டை கொட்டியதிலிருந்து, அங்கிருந்த ஒருவரிற்கு திருமணம் நடந்தவரை பல நிகழ்வுகளை நேரில் பார்த்திருக்கின்றேன். ஆரம்பகாலத்தில் பெண் வயதிற்கு வருவதை சடங்காக கொண்டாடியதாகவும் அதை இப்போது முற்றுமுழுதாக இல்லாமற்செய்துவிட்டதாகவும் சொன்னது சந்தோசமாயிருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு ஆய்வுக்காய் ஒரு பெண்மணி அங்கே அடிக்கடி வருவார். தனது ஆய்வின் முடிவுகள் குறித்து அவ்வவ்போது கலந்துரையாடுவர். முக்கியமாய், இந்தப்பிள்ளைகளை பெண்போராளிகளே பராமரிப்பதால் அவர்களின் ஆளுமை/செல்வாக்கு இந்தக்குழந்தைகளுக்கும் வரும் ஆபத்து இருப்பதாய் கூறினார். அதை பராமரிக்கும் பெண்போராளிகள் கவனமாய் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு எதிர்வினையாய் ஆவணப்படம் எடுத்த நண்பர் சில கருத்துக்களை முன்வைத்தார். 'இங்கிருந்து பெண்கள் திருமணம் செய்துகொண்டு போகிறார்கள். ஆசிரியர்களாக, பத்திரிக்கை நிருபர்களாக, காவல்துறையினராக எல்லாம் பல்வேறு பரிணாமங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒற்றைப்படையாக அப்படிச்சொல்ல முடியாது என்று'. செஞ்சோலையிலிருந்தும் போராளிகளாகப்போயிருக்கிறார்கள். மரணித்துமிருக்கிறார்கள். அங்கே நின்றபோது அப்படிப்போராளிகளாக சென்றவர்களை சந்திருக்கிறேன். செஞ்சோலையிலிருந்து இயக்கத்திற்கு சேருவது என்றால் எடுக்கமாட்டார்கள். இவர்கள் கள்ளப்பெயர் சொல்லி, கள்ள இடம்சொல்லி ஒருமாதிரி சேர்ந்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்கூட அப்படி கூட்டாகப் போனவர்களை திருப்பி அழைத்து வந்திருந்தனர்.
.........
அங்கேயிருக்கும் வளங்களோடு ஒப்பிடும்போது செஞ்சோலைப்பிள்ளைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றனர் என்றுதான் சொல்லவேண்டும்.. அவர்கள் உடை அன்பளிப்புக்கொடுப்பது என்றால் புதிய உடைகள் மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்று புலிகளின் தலைமைபீட உத்தரவு இருக்கிறது. எவரும் செஞ்சோலைக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. வருபவர் எவர் என்றாலும் ஒரு குடில்தான் தங்கவைக்கப்பட்டு அங்கேதான் மற்றவர்கள் சென்று சந்திக்கமுடியும். நான் இரவில் செஞ்சோலைக்கு அருகிலிருந்த ஓர் இடத்தில் தங்கியிருந்தபடியால் யாரவது ஆண்போராளிகள் என்னை அந்த இடத்திலிருந்து செஞ்சோலையில் மோட்டார்பைக்கிளினால் இறக்கினாலும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு அப்பால் அவர்களும் வருவதில்லை.
.......
ஆரம்பத்தில் ஏதோ ஆசிரியர்கள் மாதிரி மதிப்புத்தந்த செஞ்சோலைப்பிள்ளைகளிடம் நாங்களும் உங்களை மாதிரித்தான் என்றபிறகு நெருக்கமாய் பழகி அந்த மாதிரி பகடி பண்ணுவார்கள். நிற்கும் வேலையில் எல்லாம், எலுமிச்சை juice, இளநீர், பிஸ்கட் என்று ஓரே சாப்பாடுதான். அதுவும் யாராவது புதிதாய் ஆக்கள் வந்தால், அவர்களின் சாட்டில் இன்னும் கூடக் கிடைக்கும். உண்மையில் அங்கேபோய்தான் மூன்று நேரம் ஒழுங்காய் சாப்பிடப்பழகினேன். கனடாவில் என்றால் இரண்டு நேரந்தான், அதுவும் அரைகுறைதான். இதையெல்லாம் கேட்டபின் என் அண்ணாமார்கள் சொன்னார்கள், ஏதாவது செய்துவிட்டு வாவென்றால், இப்படி அங்கே கஷ்டப்படுகின்ற சனங்களின் சாப்பாட்டை வெட்டிவிட்டு வந்துவிட்டாய் என்று சொன்னார்கள். சரி அங்கே நடந்த நகைச்சுவைகளில் ஒன்றைச் சொல்கிறேன். ஜெனரேட்டர் போட்டு வரும் மின்சாரத்தில்தான் கணணியை இயக்கமுடியும். அதிகமாய் யாரவது ஆண்போராளிகள் ஜெனரேட்டரை இயக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட மூன்று நான்கு மணித்தியாலங்கள்தான் தொடர்ந்து பாவிக்கமுடியும். ஒரு முறை ஆண்போராளிகள் எவரும் இல்லாததால், சரி நாங்கள் போய் start செய்வோம் என்று போனோம். எனக்கு முதலே தெரியும், என்ரை நோஞ்சான் உடம்பைக்கொண்டு அதை இயக்கமுடியாது என்று. ம்கூம் எவ்வளவு கஷ்டப்பட்டும் இயக்கமுடியவில்லை. இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் சொன்னார், 'இவ்வளவு நாளும் உங்களுக்கு teaயும் பிஸ்கெட்டும் கொண்டுவந்து தந்தது எல்லாம் waste' என்று.
-DJThamilzhan-
நன்றி:http://djthamilan.blogspot.com
Sunday, October 7, 2007
சிட்டுக்குருவிகள்
Posted by x-group at 6:32 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 உரையாடல்:
Post a Comment