January 6th, 2007
ஒவ்வொரு மாலையும் அருகாமையில் ஒரு நூலகத்தில் குழந்தைகளைக் கூட்டிச் சென்று வாசிக்கின்ற புத்தகங்களில் குண்டு போடாத வானங்கள் பற்றிய கற்பனைகளை நாங்கள் தருகிறோம். விண்மீன்கள் மின்னும் இரவுகளில் குண்டுகள் போடாத விமானங்கள் அவர்களது சுவர்களை அலங்கரித்திருக்கின்றன; பிள்ளைகளுக்கான எமது கதைகளில் கற்பனைகளும் பயணங்களும் இருத்தலின் அத்தனை மகிழ்ச்சிகளும் வந்து போகின்றன.
யுத்த புலத்தில் பிள்ளைப் பிராயத்திற்கான அத்தனை ஆசைகளும் உயிர்வாழ்தல் என்ற ஒன்றையே சுற்றுகின்றன. அதற்கு அப்புறம்தானே எல்லாமும்?
யுத்தத்தைப் பற்றி பேசினோம்.
யுத்தத்தால் பாதிக்கப்படுவது அதை முகங் கொடுத்திருக்கிற மக்களின் வாழ்வு என்றால், அதில் தமது பெற்றோர் உறவுகளை இழக்கிற பிள்ளைகளின் வாழ்வு எந்த உத்தரவாதமுமற்ற வெளியில் விடப்படுகிறது. அதிலும் “பாதுகாப்பானவை” என நம்பப்படுகின்ற குடும்பம், உறவுகள் இவற்றுக்குள்ளேயே பாதுகாப்பற்றவர்களாய், இலகுவில் ஏய்க்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களான சிறுவர்களை யுத்தம் தெருவில் விடுகிறது, எச் சிறு பாதுகாப்பும் இன்றி.
இந்த வார செய்திகளில், தென் சூடானில் (மேன்மைதாங்கிய உலகின் காவலர்களான) ஐ.நா.”அமைதிப் படையினர்” 12 வயதிற்குட்பட்டவர்கள் உட்பட சிறுவர்கள்மீது பாலியற் சுரண்டல்கள் -துஸ்பிரயோகங்கள் வன்முறைகள்- செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கினிமேல் விசாரணைகள் நடக்கும்; பிறகு, ”அமைதி” வழங்கப்போன இன்னொரு நாட்டில் அவர்களது மீறல்களிற்கான தீர்ப்பை ஐ.நாடுகளே பார்த்தும் கொள்ளும்.
இச் செய்திகளும், அதிகாரமும் உடற்பலமும் உடையவர்களான பெரியவர்களின் ராட்சத உலகின் முன், மிகச் சிறிய மனிதர்களான சிறுவர்களது நிராதரவுநிலையையே வெளிப்படுத்துகின்றன.
இன்று - யுத்த தேசங்களை எல்லாம் சமூக நிலையங்கள், அரசுசாரா (NGOs) மற்றும் பிற உதவி வழங்கும் நிறுவனங்கள் சூழ்ந்திருக்கின்றன. எதிர்காலமற்ற பிள்ளைகளின் வாழ்விற்கு அவை முழு உத்தரவாதம் தராதபோதும் உயிர் வாழ்தலின் அடிப்படைத் தேவைகளிற்கு உதவுவதற்கென இருக்கின்றன; அரசுசாரா நிறுவனங்கள் குறித்து பல விமர்சனங்கள் எங்களுக்கு இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தேர்வுகள் இல்லை.
சில வருடங்களிற்கு முன், நண்பர்கள் ஊடாக “உதவி” பற்றிய அறிமுகம் கிடைத்தது. “உதவி” பற்றி வலைத் தளத்தில் பின்வருவாறு இருக்கிறது:
இலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும் குடும்ப உறுப்பினரை இழந்து சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு, கிடைக்கின்ற உதவியை சேர்ப்பிக்க உதவி- உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களில் சிலர் இன, மத, மொழி வேறுபாடுகள் கடந்து சமூக அக்கறை கொண்ட வேறும் பல நாட்டவர்களின் ஆதரவுடன் இணைந்து உருவாக்கியுள்ளதே உதவி- இணையம்.
சமூகசேவை என்று வரும் நபர்களே பின்னர் பிரமுகர்களாகிவிடுவதும், நபர்களுக்கூடாகவே செயற்பாடுகள் பார்க்கப்படுவதும், கூட்டு வேலை முறை சிதைந்து தனிநபர்கள் முக்கியத்துவம் பெறுவதும் போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு உதவி- நபர்களைப் பின் தள்ளி செயலை முன்னிறுத்தியுள்ளது.
உதவி- ஒரு நிறுவனமோ, குழுவோ அல்ல. எந்த ஒரு மத நிறுவனத்தினதோ, அரசியல் கட்சியினதோ பிரதிநிதியும் அல்ல; சமூக அக்கறை கொண்டு உதவ முன்வருபவர்களின் உதவியை சிறுவர் இல்லங்களிலுள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும் சுயாதீனமான ஒரு வழி மட்டுமே.
இலங்கை அரசினதோ, அரச சார்பற்ற நிறுவனங்களினதோ உதவிகள் போதுமானளவில் கிடைக்கப் பெறாமல், மிகவும் வறுமை நிலையிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கு உதவி-க்கு கிடைக்கும் நிதியுதவி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.
உதவி-யுடனான தொடர்புகளில் சில பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும், மொழிபெயர்ப்பு, இணையத் தயாரிப்பு, நிதியுதவி, ஆலோசனை, கண்காணிப்பு என்றும் இன்னும் பல வழிகளிலும் உதவி-யில் பங்கெடுக்கின்ற பெயர் அறியாத அனைவரும் உதவி-யின் பொறுப்பாளர்களே.பரீட்சார்த்த முயற்சியாக, முகம் தெரியாமலே கூட்டு வேலைமுறையில் இயங்கும் உதவி-க்கு தலைவர், செயலாளரோ, அலுவலகங்கள், கிளைகளோ இல்லை.
கூட்டுவேலைமுறை என்பதும் உதவி ஒரு அரசுசாரா நிறுவனமோ, அமைப்போல அல்ல என்பதும், அதன் “பின்னால்” யார் யார் இருக்கிறார்கள், அவர்களது அரசியல் உள்நோக்கங்கள் என்ன - இந்த குளறுபடிகள் எல்லாம் இல்லாமல், ஒரு போதுநோக்கில் செயற்படுகிற தன்மையும், “உதவி”-யை வேறுபடுத்திக் காட்டியது. பணத்தை சேர்த்து சிறுவர் இல்லங்களுக்கு கொடுப்பது மாத்திரமே “உதவி” செய்கிறது. அது அங்கு போய்ச் சேருகிறதா என்பனவை பணம் தந்தவர்களே சரி பார்த்துக் கொள்ள முடியும். உதவி இணையத்தளம் உட்பட அதன் கட்டுரைகள், குறிப்புகள், சிறுவர்களது படைப்புகளது மொழிபெயர்ப்புகள், சகலமும் தன்னார்வமாக செயற்படுகிற உதவி நண்பர்களாலேயே நடத்தப்படுகிறது. இப்படியொரு சுதந்திரமான, பெயர் முக்கியமற்ற சில தனிநபர்களின் கூட்டுவேலை முறை பிடித்துப் போக, சிறுவர்களது படைப்புகளூடாக நுழைந்த உலகம் பலவிதமான உணர்வுகளை எடுத்து வந்தது.
பூக்களோடும் வண்ணத்துப்பூச்சிகளோடும் திரிந்த நிலங்களில் அவர்கள்
*”பூவே,
எனது அப்பா, அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?”
என்றும்-
**”கதவைத் திறந்தால்
வெளியே
இறந்த உடல்கள்தான்.
நான் காண விரும்பியதோ
அழகான
பூக்களைத்தான்.”
என்றும்-
தமதான எளிய வார்த்தைகளோடு கடந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு பதில் கிடையாது.
ஆனால் அனர்த்தங்களினூடும் எஞ்சியிருக்கும் சிறிதளவு நம்பிக்கையை, எல்லையற்ற கற்பனையைத் தானும் விரக்தி பறித்திரக் கூடாது என்கிற எண்ணத்தையே அவை தந்துகொண்டிருந்தன.
யுத்த நிறுத்தத் காலப் பகுதியில் (2004) இக் கவிதைகள் இல்லச் சிறுவர்களால் எழுதப்பட்டிருந்தன. பல நண்பர்களும் இலங்கை போன போது, இல்லங்களை பார்வையிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவளித்து அங்குள்ள நிலமைகள் குறித்து, சிறுவர்களின் மேலதிக தேவைகள் குறித்து, -இணையத் தளத்தில்- எழுதியிருந்தார்கள். பிள்ளைகளிற்கு எழுதப்பட்ட கடிதங்கள், அவர்களது கவிதை,கட்டுரை ஆக்கங்கள் குறித்து உதவி-வாசகர்களிடமிருந்து வந்த கருத்துக்கள் அவர்களிடம் சேர்க்கப்பட்டிருந்தன (தங்கள் மீதான மனிதர்களின் கவனம் (attention) அவர்களை மிகுந்த மகிழ்ச்சிப் படுத்தியது).
யுத்த நிறுத்த காலத்திலேயே உதவியால் சேர்க்கப்படுகிற நிதி குழந்தைகளது உணவுக்கு மாத்திரமே போதுமானதாய் இருந்தது.
இப்போது யுத்தம் ஆரம்பித்து, பிரதான வீதி மூடுபட்ட பிற்பாடு பிள்ளைகளின் நிலமை மோசமாகியிருக்கிறது. உதவி நண்பர் ஒருவர் பிள்ளைகளின் தற்போதைய நிலவரம் குறித்து எழுதியது கீழே:
பிள்ளைகளின் நிலமை கவலைக்கிடம். றோட்டெல்லாம் மூடியிருக்கிற படியா அனுப்பிற காசையே அவையள் எடுக்கிறது கஸ்ரமாயிருக்குது. சாப்பாட்டிச் சாமான்களும் இல்லை. கூடின விலை குடுத்து வேண்ட அவையிட்டை காசும் இல்லை. தை பள்ளிக்கூடம் தொடங்கேக்க பிள்ளையளுக்கு, கொப்பி புத்தகங்கள் வேண்டவே நிறையக் காசு வேணும். காசிருந்தாலும் வாங்கிற நிலமையிருக்க வேணும்.
-பொடிச்சி-
நன்றி:http://peddai.net
Monday, October 8, 2007
பிள்ளைகள்… பிள்ளைகள்…
Posted by x-group at 9:13 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 உரையாடல்:
Post a Comment