Sunday, October 28, 2007

துள்ளித்திரியும் பிள்ளைப்பருவம்

- தெ. மதுசூதனன்

தேசியச் சட்டங்கள் பிராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்ட ஓர் ஆள் சிறுவர் ஆவார்.

எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் - பிள்ளைச் செல்வம் பெறுமதி மிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல்பாட்டாளர்கள்.

பிள்ளைகளுக்கும் உரிமைகள் உண்டு. இதனை நமது பெரியவர்கள் அறிவதில்லை. சிறுவர் உழைப்பு, சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பன மூன்றாம் மண்டல நாடுகளின் தனித்துவமான பிரச்சினைகள் எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல.

இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் நாம் உள்ளோம். இதற்காக அனைத்து நாடுகள் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய போக்கு உள்ளது.

இதன் முக்கியமான நான்கு அம்சங்கள்:

1. வாழ்க்கை

இயற்கையாக அமைந்துள்ள உரிமை உயிர் வாழ்தலுக்குள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.

2. முன்னேற்றம்

ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமை

3. பாதுகாப்பு

உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம்.

4. பங்குபெறல்

கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை.

யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.

நமது சிறார்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டியது பெரியவர்களின் பொறுப்பாகும். எனவே இப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது சமூகத்தின் தார்மீகக் கடமையாக இருக்கிறது.

சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் என்றால், இதற்கு அனைத்து நாடுகள் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவிலக்கணங்கள் ஏதும் இல்லை. ஆனால் 1989 நவம்பர் 20 - இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.

அதாவது பிள்ளைப் பருவத்தின் தேவைகளை முழு அளவில் நிறைவு செய்வதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதுவே சிறுவர் துஷ்பிரயோகம் என அனுமானித்துக் கொள்ளலாம்.

குறிப்பாகச் சொல்வதானால் பிள்ளைப்பருவம் என்பது தங்கியிருக்கும் ஒரு காலப்பிரிவாகும். எனவே அது சிறப்பான அக்கறையையும் பராமரிப்பினையும் வேண்டி நிற்கும் நேரத்தில், கடுமையாக ஊறு விளைவிக்கத்தக்க ஒரு பருவமாகவும் இருக்கிறது. அத்துடன் பிள்ளைப்பருவம் என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர்ச்சி யடையும் ஒரு காலகட்டமாகும்.

அதனால் இதற்கு சிறப்பு பாதுகாப்பு முறைகளும், உசிதமான சூழலும் அமைதல் அவசியமாகும். மேலும் இப் பருவத்திலேயே பிள்ளை தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகினைப் புரிந்து கொள்வதற்காகவும் எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் தீவிரமான முறையில் கல்வி பயிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.

எனவே கவனித்தல், கேள்வி கேட்டல், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை மாதிரிகளைப் பயிலுதல், அறிவையும் திறன்களையும் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் பிள்ளைப் பருவத்தில் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இதனை பிள்ளைப் பருவத்துக்கான கருதுகோளாக ஏற்றுக்கொள்ளும்பொழுது பிள்ளையின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் அல்லது தடங்கலாக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையாக இருக்கிறதெனக் கொள்ள முடியும். அத்துமீறல் நடவடிக்கை எனவும் கொள்ள முடியும்.

இந்தக் கண்ணோட்டத்தில் நோக்கும்பொழுது சிறுவர் துஷ்பிரயோகம் என்பது விரிவான பல அம்சங்களைக் கொண்டிருப்பதனைக் காண முடிகிறது.

அது சமூகவியல், மானுடவியல், உடற்கூற்றியல், சமூக உளவியல், கல்வி, குற்றவியல், சட்டம், பொருளியல், அரசியல் என பல்வேறு துறைகளிலும் பின்னிப் பிணைந்த சிக்கலான பல பரிமாணங்களைக் கொண்ட துறையாக இருக்கிறது. அதோடு கலாசாரம், மனப்பாங்குகள் என்பவற்றையும் அது உள்ளடக்குகிறது. இந்நிலையில் நாம் இன்று சிறுவர் துஷ்பிரயோகம், அதாவது அத்துமீறப்பட்ட சிறுவர் உரிமைப் பறிப்பு குறித்த நமது கவனத்தைக் குவிக்கவும் சில சிரத்தைகளை சிந்தனைகளை ஏற்படுத்துவது தார்மீகக் கடமை.

நன்றி:ஆறாம்திணை

1 உரையாடல்:

Anonymous said...

வாழ்த்துக்கள்....
உங்கள் முயற்சியைத் தொடருங்கள்..