Friday, September 28, 2007

இலங்கை, தமிழர் மற்றும் கல்வி

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் கல்வி தொடர்பான உரையாடலை பரந்த தளத்தில் தொடக்கி வைத்தலும் கல்வி எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ளல் பற்றிய பன்முகப்பட்ட விடயங்கள் பேசப்படுதலும் எம்முன் விரவிக்கிடக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளாகும். மூடிய கட்டமைப்பைக் கொண்டியங்கும் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் இன, மத, சாதீய அடிப்படைவாத மனநிலைகளை ஊட்டி வளர்க்கும் பாடசாலைக்கல்வி முறைமை போன்றவற்றை சமூகத்தளத்தில் முன்னிறுத்தி கேள்விக்குட்படுத்துதல் எம்முன் இருக்கும் சவாலான பிரச்சினையாகும்.

பொருளாதார மேம்படுத்தலை மட்டுமேயாக முன்வைத்து சிறுவயது முதலே ஊட்டப்படும் கல்வி, நுகர்வுக் கலாச்சார ஊக்குவிப்பு சமூக உற்பத்திகளை உருவாக்க மட்டுமே பயன்படுகின்றது. பல்கலைக்கழகம் வரையும் இன்னும் அதற்கு அப்பாலும் சமூக அங்கீகரிப்புட தமது சமூகத்திற்கு எதிரான வாழ்முறைப் போக்கு சமூகப் பிரதிநிதிகளாலேயே உருவாக்கப்பட்டுவிடுகின்றன. ஆரம்பக் கல்வியிலேயே ஒவ்வொரு சிறு குழந்தையும் பொய்ப்புரைகளுடன் தமது ஆசானை எதிர்கொள்கின்றனர். இறுதிவரையும் அதை நம்பியே வாழ்ந்தும் இன்னும் அதே கட்டமைப்பை பேணும் நோக்கில் பொய்ப்புரைகளுக்கு பின்னிணைப்பும் சேர்த்து விடுகின்றனர். பொய்ப்புரைகளை சமூகக் கட்டமைப்பை கேள்வி கேட்பதனூடாக போலிச் சமூகக் கட்டமைப்பில் ஏதேனுமொரு மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என நினைக்கின்றோம். அதிலும் வளரிளம் பருவத்திலே வாழ்வின் பன்முனைச் சாத்தியங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தற்போதைய பெரும் யதார்த்தச் சூழலை சிதைத்துவிட முடியும் என்றே நினைக்கின்றோம். சிறுவர் உரிமை தொடர்பான விடயங்களையும் கையாள எண்ணியுள்ளோம். சிறுவர்கள் எதிர்நோக்கும் கல்விகள் பிரச்சினைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் சார்பிலும் தயவுதாட்சணியமற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். மற்றும் பல்கலைக்கழகங்களின் மூடிய வளாகங்களுக்குள் நடக்கும் செயற்பாடுகளை பொதுவெளியில் உரையாடவிடுவது இன்னும் பாடசாலை வகுப்பறஒயின் நான்கு சுவர்களுக்கிடையில் நடக்கும் கொடூர சம்பவங்களை பொதுவெளியில் உரையாடவிடுவதும் எமக்கான கடப்பாடாகக் கருதுகின்றோம்.

இதற்காக சமூக விஞ்ஞானிகள், உளவியளாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து உரையாடலை எதிர்பார்க்கின்றோம்

0 உரையாடல்: