Sunday, November 11, 2007

பெண் குழந்தைகளை முத்தமிடுவதில் எல்லை தேவையா?

பெண் குழந்தைகளை ஆண்கள் கொஞ்சும் போது, பெண்குழந்தைகள் தர்மசங்கடமாக உணர்கின்றன என்பது தெரிந்த உண்மை. தனக்கு பிடிக்காத வகையில் யாராவது தன்னைக் கொஞ்சினால் வெளியே சொல்லவே அச்சப்பட்டு, மனம் வெதும்பி, மன உளைச்சலுக்குக் குழந்தைகள் ஆளாகின்றன. இதே மனநிலையில் வழரும் போது, சில பெண்கள் ஆண்களைக் கண்டாலே வெறுப்பு ஏற்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெரும்பாலான ஆண்கள் தங்கள் எல்லையை மீறுவதில்லை. ஒரு சிலர், 'குழந்தை தானே...' என்று நினைத்து உதட்டைக் கிள்ளுவது, கன்னத்தில் முத்தமிடுவது உட்பட பல செயல்களை அவர்களையும் அறியாமல் செய்து விடுகின்றனர். மிகச்சில ஆண்கள், எல்லையையும் மீறுகின்றனர். குழந்தை என்று தெரிந்தே எல்லை மீறிச் செயற்படுகின்றனர்.

ஆனால், இதை பெற்ற தாய் தான் உற்ற கண்ணாக இருந்து குழந்தையை எச்சரித்தபடி பார்க்க வேண்டும் என்கின்றனர் அவர்கள். பல குடும்பங்களில் இதைக்காணலாம். 'அந்த அங்கிள் வந்தா, கிட்டே போகாதே. சட்டை போடாமல் வெளியே போகாதே. எல்லோர் எதிரேயும் சட்டையைக் கழற்றாதே..' என்று அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள் பார்க்கும், கேட்கும் நமக்கு ஏதோ போல் தோன்றினாலும், யதார்த்தத்தை நினைக்கும் போது அதில் எதுவும் பிழையாக தெரியாது.

மனநல மருத்துவர்களும் பெண்குழந்தைகள் மனநிலை பாதிக்காத வகையில் எப்படி நடந்து கொள்வது என்று நிறைய அறிவுரை கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த குழந்தைகள் மாநாட்டில், 'பெண்குழந்தைகளை கொஞ்சுவதில் உறவினர்களுக்கு எல்லை வகிக்க வேண்டும்' என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை கொஞ்சும் சாட்டில் சிலர் அதாவது ஆண்கள் எல்லை மீறி விடுவதால் ஆண்கள் என்றாலே குழந்தைகள் அருவருக்கத் தொடங்கி விடுகின்றனர். இது அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கத் தொடங்கி விடுகிறது. இதனால் சில குழந்தைகளின் மனநிலை பாதிப்புக்கும் உள்ளாவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மகளிர் ஆணையத்தில் ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. பெண் குழந்தை கல்வி கற்றால், அந்த குடும்பமே படித்ததற்கு சமம். ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒரு திறமை பெற்றுள்ளது. சுய சிந்தனையுடன் குழந்தைகள் உள்ளன. பெண்குழந்தைகளுக்கு கல்வி மட்டும் போதாது. தற்காப்பு கலைகளும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆண் ஆசிரியர் பிரம்பால் கையில் அடித்தால் வாங்குவது வேறு. ஆனால் கையால் தொட்டால், ஆசிரியருடைய கண்களைப் பாருங்கள். அவர் கண்ணில் கோபம், இரக்கம் அல்லது காமம் என எந்த உணர்வு இருக்கிறது என்பது தெரியும். பக்கத்து வீட்டில் வசிப்போரும், உறவினர்களும் கூட பெண் குழந்தைகளை கொஞ்சுவதில் எல்லை உள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை என்பது ஒவ்வொரு பெண்குழந்தைகளுக்கும் தெரியும். எனவே, பெண் குழந்தைகளுடன் நட்பு முறையில் பெற்றோர் பழகும் போது, தனக்கு நடக்கும் இது போன்ற தொந்தரவுகள் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்வர். சம்பந்தப்பட்ட உறவினர்களிடமே, அளவோடு பழகுமாறு கூறி விடுவது மிக மிக நல்லது.

நன்றி: வீரகேசரி.

பின்குறிப்பு: ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை மையமாக வைத்து, குழந்தைமை ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைக்கு பெண்ணியல் நோக்கில் வேறுவிதமான பார்வைகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். பெற்றோரியல், உளவியல், உடல் நலவியல் போன்ற துறைகளின் பார்வை பெரும்பாலும் சமூக யதார்த்தக் கட்டமைப்புத் தளத்தின் மீது, அதன் பிரச்சனைப்பாடுகளை எதிர்கொள்ளும் விதமாகவே அமைந்திருக்கும். பெண்குழந்தைகள் மட்டுமல்லாது ஆண் குழந்தைகள் கூட பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர். ஆண், பெண் என்ற வித்தியாசம் கடந்த சூழலை நோக்கிய சமூகப்பார்வையில் மேற்படி கட்டுரை தனது மதிப்பை இழக்கின்றது. ஆரம்ப பெண்ணியத்துக்கு பின்பான பெண் மீதானஆணதிகாரம் ஒரு கட்டத்தில் பெண்ணை 'கொண்டாடுவதன்' மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகு அதை தாண்டிய பரிமாறும் ஆண், பெண் இயல்புகள் உள்ள வெறுமனே பௌதீகஉடல் சார் ஆண், பெண் வேறுபாடு மட்டுமேயென்ற தளத்தில் தன்னை தகவமைத்துகொள்ள முற்படுகின்றது. ஆயினும் இன்னும் ஆணாதிக்க கட்டமைப்பும், ஆண், பெண் என்ற வித்தியாசமான அணுகுமுறையும் பெரும்பாலும் நிலைகொண்டுள்ள இலங்கை போன்ற சமூகத்தில் இக்கட்டுரையின் தேவையை நிராகரிக்க முடியாது.
இவ்விடயம் சார்ந்து ஆழமான உரையாடலை இணைய சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

x-group